தேசம் முழுவதும் பி.எஸ்.என்.எல். மத்திய நிறுவனத்தில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குப் பத்து மாதமாக ஊதியம் கிடைக்க வில்லை.  பசியும் பட்டினியுமாக இந்தத் தொழிலாளர்கள் நாளும் ஒரு போராட்டமாக நடத்திக்  கொண்டி ருக்கிறார்கள். இவர்களுக்குக் கடன் கொடுப்பாரும் எவரும் இல்லை. கடந்த ஜனவரி 31 ஆம் தேதியில், நாகை பி.எஸ்.என்.எல்.நிறுவனத்தில் நிரந்தரப் பணியாளராகப் பணியாற்றிய ஊழியர்கள் விருப்ப ஓய்வு (வி.ஆர்.எஸ்.) என்னும் பெயரில் கட்டாய ஓய்வாக 33 ஊழியர்கள் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டார்கள். இப்படிப்பட்ட கட்டாய ஓய்வு பெற்றவர்களுக்கு பணியாற்றிய காலத்திற்கான இரண்டு மாதம் ஊதியமும் வழங்கப்பட வில்லை. வி.ஆர்.எஸ். கொடுக்காவிட்டால், வெவ்வேறு மாநிலங்களுக்கு மாற்றல் செய்து விடுவோம் என்று அச்சமூட்டியே இவ்வாறு ஆயிரக்கணக்கான நிரந்தர ஊழியகள் ஓய்வு பெற்றிருக்கிறார்கள்.

விருப்ப ஓய்வு பெற்றால் நிறையப் பணப்பலன் கிடக்கும் என்று கனவிலிருந்த இந்த ஊழியர்களுக்கு இரண்டு மாத ஊதியம் மட்டுமல்ல ஓய்வு பெறுகையில் அளிக்கப்பட வேண்டிய எவ்விதப் பணப்பலனும் கொடுக்காமல் இவர்களை பி.எஸ்.எல்.எல்.நிறுவனம், கழுத்தைப் பிடித்து வெளியேற்றிருக்கிறது. இது மிகுந்த கொடுமையாகும். நாகையில் இப்படி ஓய்வு பெற்றவர்களுக்கு எந்த வழியனுப்பு விழாவும் இல்லை. யார் விழா நடத்துவது? ஏறக்குறைய நாகை பி.எஸ்.என்.எல்.இல் ஒரு சிலரைத் தவிர அனைவரும் வீட்டுக்கு வெறுங்கையோடு வந்து விட்டார்கள்.  இந்நிலையிலும் ஓய்வு பெற்ற இந்த ஊழியர்கள் ஒன்றுகூடி, பத்து மாதமாக ஊதியமின்றி வாடுகின்ற ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத் தங்கள் சொந்தத் தொகையைப் போட்டு ஒரு குறிப்பிட்ட தொகையை ஒப்பந்தத் தொழிலாளர்களுக்குத் வழங்கியிருக்கிறார்கள்.

ஒப்பந்த ஊழியர் இறப்பு

இந்நிலையில், நாகை மாவட்டம், வேட்டைக்காரன் இருப்பு கிராமத்தில் தொலைபேசி நிலையத்தில் ஒப்பந்தத் தொழிலாளராகப் பணியாற்றி வந்த நவநீதகிருஷ்ணன் என்பவர், கடந்த 10 மாதமாக ஊதியம் கிடைக்காமல், கடன் கொடுப்பார் கூட யாருமில்லாமல், அவரது குடும்பம் பட்டினியால் வாடியது. இந்நிலையில், மன உளைச்சலிலிருந்த நவநீதகிருஷ்ணன், 9-ஆம் தேதி அன்று மதியம் மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார்.