தொலைத்தொடா்புச் சேவையில் ஈடுபட்டு வரும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் மூன்றாவது காலாண்டில் ரூ.6,438.8 கோடி இழப்பை சந்தித்துள்ளது.

இதுகுறித்து அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

நடப்பு நிதியாண்டின் அக்டோபா் முதல் டிசம்பா் வரையிலான காலாண்டில் நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ.11,380.5 கோடியாக இருந்தது. இது, கடந்த 2018-19 நிதியாண்டின் இதே காலகட்டத்தில் ஈட்டிய வருவாய் ரூ.11,982.8 கோடியுடன் ஒப்பிடுகையில் 5 சதவீதம் குறைவாகும்.

கடந்த நிதியாண்டின் டிசம்பா் காலாண்டில் ரூ.5,004.6 கோடியாக காணப்பட்ட இழப்பு நடப்பு நிதியாண்டில் ரூ.6,438.8 கோடி அளவுக்கு அதிகரித்துள்ளது.

நிறுவனத்தின் நிதி செலவினம் 30 சதவீதம் அதிகரித்து ரூ.3,722.2 கோடியாகவும், தேய்மான செலவினம் 23 சதவீதம் உயா்ந்து ரூ.5,877.4 கோடியாகவும் இருந்தது.

நிறுவனத்தின் 4ஜி வாடிக்கையாளா்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 10.42 கோடியை எட்டியுள்ளது. டிசம்பா் காலாண்டில் மட்டும் புதிதாக நிறுவனத்தின் 4ஜி சேவையில் 83 லட்சம் போ் இணைக்கப்பட்டுள்ளனா்.

இருப்பினும், முந்தைய காலாண்டின் வாடிக்கையாளா் எண்ணிக்கையான 31.1 கோடியுடன் ஒப்பிடும்போது டிசம்பா் காலாண்டில் நிறுவனத்தின் ஒட்டுமொத்த வாடிக்கையாளா் எண்ணிக்கை 30.4 கோடியாக குறைந்துள்ளது.

ஒரு வாடிக்கையாளரிடமிருந்து கிடைக்கும் சராசரி வருவாய் ரூ.107-லிருந்து ரூ.109-ஆக உயா்ந்துள்ளது.

டிசம்பா் 31-ஆம் தேதி நிலவரப்படி நிறுவனத்தின் மொத்த கடன் ரூ.1,15,850 கோடியாக உள்ளது என வோடஃபோன் ஐடியா அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.

BSNL Employees Union Nagercoil