குமரி மாவட்டத்தில் புதிய சாப்ட்வேர் முறைப்படி சம்பள வினியோகத்தில் தாமதம் ஏற்பட்டு உள்ளதால் போலீசார், ஆசிரியர்கள் கலக்கம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் காவல்துறை உள்பட அரசு துறைகளில் பணிபுரியும் பணியாளர்களுக்கு அந்தந்த மாத கடைசி வேலை நாளில் சம்பளம் வழங்கப்பட்டு விடும். கருவூலம் மூலம் சம்பள வினியோகம் நடைபெற்று வருகிறது. தற்போது இந்த நடைமுறை மாற்றப்பட்டு, ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மை திட்டத்தின் படி, ஆன்லைன் மூலம் சம்பந்தப்பட்ட பணியாளர்களின் வங்கி கணக்கில் நேரடியாக சம்பளம் வழங்கப்பட உள்ளது.

இதற்காக ஐ.எப்.எச். ஆர்.எம்.எஸ். என்ற புதிய சாப்ட்வேர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சாப்ட்வேர் மூலம் சம்பள வினியோகம் எப்படி நடைபெறும் என்பதை விளக்கும் வகையில் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.
இந்த ஐஎப்எச் ஆர்எம்எஸ் நடைமுறைப்படி நடப்பு மாதத்திலேயே  சம்பள வினியோகம் இருக்கும்  என அறிவிக்கப்பட்டது. அதன்படி பிப்ரவரி மாதத்துக்கான சம்பள பட்டியலை, புதிய சாப்ட்வேர் மூலம் பதிவு செய்து கருவூலகம் வழியாக அனுப்பி வைக்கும்படி அந்தந்த துறைகளுக்கு அறிவுறுத்தப்பட்டு இருந்தது. ஆனால் சாப்ட்வேர் பிரச்னை உள்ளிட்ட காரணங்களால் சம்பள பட்டியல் அனுப்பி வைக்க முடியாமல் துறை அலுவலர்கள் திணறினர். இதனால் குமரி மாவட்டத்திலும் அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள், காவல் துறையினருக்கு கடந்த பிப்ரவரி மாதத்துக்கான சம்பளம் இன்னும் வரவில்லை.

பல துறைகளில் இருந்து, பணியாளர்களின் சம்பள விபர பட்டியல் சாப்ட்வேர் மூலம் பதிவு செய்தும், கருவூலக துறை மூலம் அவை அனுப்பி வைக்கப்படாததால் சம்பள வினியோகம் தள்ளி போவதாக கூறப்படுகிறது.  இந்த திட்டத்தின் படி அந்தந்த துறை அலுவலகத்தில் இருந்து புதிய சாப்ட்வேரில், சம்பள பெயர் பட்டியலை பதிவு செய்து கருவூலகத்தில் ஒப்படைக்க வேண்டும். கருவூலகத்தில் அதை சாப்ட்வேரில் சரிபார்த்து, டோக்கன் வழங்கப்படும். டோக்கன் பதிவு செய்யப்பட்ட 24 மணி நேரத்தில் அந்த துறைக்கான சம்பளம் வந்து விடும் என கூறி இருந்தனர்.

ஆனால் சாப்ட்வேர் வேகம் இல்லாததால் கருவூலகத்தில் அதை சரி பார்ப்பதிலும் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த பணிக்காக நேற்று மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலக அமைச்சு பணியாளர்கள் சம்பள பட்டியலுடன், கருவூலகத்துக்கு வந்து இருந்தனர். பிற துறைகளில் இருந்தும் அலுவலர்கள் வந்து இருந்தனர். ஒரு சில துறைகளில் ஏற்கனவே பதிவு செய்த பெயர் பட்டியல் சாப்ட்வேரில் பதிவாக இல்லை. இதனால் மறுபதிவு நடைபெற்று வருகிறது. எனவே சம்பள வினியோகம் இன்னும் தள்ளி போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த வாரம் தான் சம்பளம் கிடைக்கும் என கருவூலக வட்டாரம் தெரிவித்துள்ளன.  இந்த நிலையில் கருவூலக இணை ஆணையர் தலைமையிலான குழுவினர் நேற்று குமரி மாவட்டம் வந்தனர். அவர்கள் மாவட்ட கருவூலக அதிகாரி பெருமாள் மற்றும் அலுவலர்களுடன் இது பற்றி ஆலோசனை நடத்தினர்.

BSNL Employees Union Nagercoil