கச்சா எண்ணெயின் விலை உலகச் சந்தையில் கடந்த ஜனவரி ஒன்றாம் நிலவரப்படி பீப்பாய் 61.13 டாலராக இருந்தது. அப்போது பெட்ரோல், டீசலின் விலை இந்திய சந்தையில் முறையே ரூ.78.12, ரூ.71.86 ஆக விற்கப்பட்டது.. மார்ச் 10 ஆம் தேதி நிலவரப்படி கச்சா எண்ணெய் விலை 30.20 டாலராக குறைந்துவிட்டது. ஆனால், பெட்ரோல், டீசல் விலை ரூ.73.28, ரூ.65.59 என்ற அளவில்தான் குறைந்துள்ளது. இது உண்மையாக குறைக்கப்பட வேண்டிய விலையில் ஐந்தில் ஒரு பங்குக்கும் குறைவானது என்பது குறிப்பிடத்தக்கது.

கச்சா எண்ணெய் விலைக்கு இணையாக பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படவில்லை என்பதை மிகவும் எளிதாக நிரூபிக்க முடியும். ஜனவரி ஒன்றாம் தேதி ஒரு பீப்பாய் கச்சா எண்ணெயின் விலை 61.13 டாலர் எனும் நிலையில் ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.35.65 ஆகும். இதில் சுத்திகரிப்பு மற்றும் வாகன வாடகை செலவுகளும் அடக்கம் ஆகும். அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11% விற்பனை வரியாக ரூ.18.98 சேர்த்துதான் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.78.12க்கு விற்பனை செய்யப்பட்டது.

இன்றைய சூழலில் கச்சா எண்ணெய் விலை 30.20 டாலர்தான் என்பதால், ஒரு லிட்டர் பெட்ரோலின் அடக்க விலை ரூ.17.66 மட்டும் தான். அத்துடன் அதன் மீது கலால் வரி ரூ.19.98, விற்பனையாளர் கமிஷன் ரூ.3.52 ஆகியவற்றுடன் தமிழக அரசின் 32.11% விற்பனை வரியாக ரூ.13.21 சேர்த்தால் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.54.37க்கு விற்பனை செய்யப்பட வேண்டும். ஆனால், ரூ.18.91 கூடுதலாக விற்கப்படுகிறது. இது மிகவும் அநியாயமாகும்.

பொருளாதார மந்த நிலை காரணமாகவே கச்சா எண்ணெய் விலை குறைந்துள்ளது. இதனால் கிடைக்கும் பயன்கள், பொருளாதார மந்த நிலையால் பாதிக்கப்படக்கூடிய சாதாரண மக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். அனைத்தையும் அரசே அனுபவிக்கக்கூடாது.

BSNL Employees Union Nagercoil