ஒரு பிரிட்டிஷ் பயணிகள் கப்பல் கரீபியக் கடல்கள் வழியாக 1128 பயணிகளுடனும், 384 மாலுமிகள் உள்ளிட்ட பணியாளர்களுடனும் சென்றுகொண்டிருந்தது. பயணத்தின் இடையில், சில பயணிகளுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. கப்பலுக்குள் இருந்த மருத்துவமனையில் சிகிச்சைகள் அளிக்கப்பட்ட போதிலும் பலன் கிடைக்க வில்லை. காய்ச்சல், இருமல், மூச்சுத்திணறல் என அடுத்தடுத்து நிலைமை மாறியுள்ளது. முதலில் 8 பயணிகளுக்கு இத்தகைய பாதிப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், கொரோனா பாதிப்பாக இருக்கும் என்று அச்சம் எழுந்தது. அதற்கான பரிசோதனைகள் செய்யப்பட்ட  நிலையில், 2 அமெரிக்கர்கள், 2 பிரிட்டிஷ்காரர்கள், 4 பிலிப்பைன்ஸ் நாட்டவர் என 8 பயணிகள் கொரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருப்பது தெரியவந்தது.

உடனடியாக கப்பலை ஏதேனும் துறைமுகத்தில் நிறுத்தி அனைத்து பயணிகளையும் இறக்கி உரிய பரிசோதனைகளும் சிகிச்சைகளும் மேற்கொண்டு அவர்களை சொந்த நாடுகளுக்கு அனுப்பிவைத்து விடலாம்  என மாலுமிகள் முடிவுசெய்து, கப்பல் செல்லும் திசையில் உள்ள பல துறைமுகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். ஆனால் எங்கிருந்தும் அவர்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை. பிப்ரவரி கடைசி வாரத்தில் கப்பலின் மாலுமிகள் டொமினிகன் குடியரசின் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தனர். உங்கள் நாட்டிற்கு அருகில் இருக்கிறோம், அனுமதி தாருங்கள் என்று வேண்டுகோள் விடுத்தனர். கொரோனா பாதிப்பு சில பேருக்கு ஏற்பட்டுள்ளது என்பதை அறிந்த டொமினிகன் குடியரசு  அதிகாரிகள், அந்தக் கப்பலுக்கு அனுமதி மறுத்துவிட்டனர். இதற்கிடையே கப்பலுக்குள் நிலைமை தீவிரமடை கிறது. மேலும் சில பயணிகளுக்கும், பணியாளர் களுக்கும் தொற்று ஏற்படுகிறது. மார்ச் முதல் வாரத்தில், மொத்தமுள்ள பயணிகளில் 22 பேருக்கும் பணியாளர்களில் 21 பேருக்கும் ப்ளூ காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏற்பட்டுள்ளன. அவர்கள் உள்ளேயே தனிமைப்படுத்தப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப் பட்டுள்ளது. அவர்களில் 5 பேருக்கு கோவிட் – 19  எனும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் வேறு துறைமுகங்களை மாலுமிகள் அணுகுகிறார்கள். குராகவ், பார்படாஸ் ஆகிய துறை முகங்களில் கப்பலை நங்கூரமிட்டு நிறுத்த அனுமதி கோரு கிறார்கள். ஆனால் அங்கும் அனுமதி கிடைக்கவில்லை. பிரிட்டனைச் சேர்ந்த பிரட் ஆல்சன் எனும் நிறுவனத்திற்கு சொந்தமான ப்ரைமர் எனும் அந்த பயணிகள் கப்பல் எங்கு செல்வது என்று தெரியாமல் நடுக்கடலில் திணறுகிறது. உள்ளே பயணிகள் மத்தியில் பீதியும் பதற்றமும் அதிகரிக்கிறது. இந்தத் தகவல் கியூப அரசுக்கு சில நாட்களுக்கு முன்பு தெரியவருகிறது. இதனிடையே கப்பல் மாலுமிகளும் கியூப அரசிடம் வேண்டுகோள் விடுக்கிறார்கள். ஹவானா  அல்லது கியூபாவின் வேறு ஏதேனும் துறைமுகத்தில் கப்பலை நங்கூரமிடவும், பயணிகளை இறக்கி அவரவர் சொந்தநாட்டிற்கு அனுப்பிட ஏற்பாடு செய்ய வேண்டுமென்றும் அனுமதி கேட்கிறார்கள்.

கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ள பயணிகளால் தங்களது நாட்டிற்கு பாதிப்பு வந்துவிடும், எனவே அவர் களை அனுமதிப்பது ஆபத்து என்று அந்த மகத்தான சோசலிச நாட்டின் அரசு கருதவில்லை; கப்பலில் இருப்பவர்கள் மனிதர்கள்; அவர்களின் உயிர் முக்கியமானது; ஒரு உயிர் கூட பறிபோய்விடக்கூடாது; மற்றவர்களுக்கும் தொற்றி விடக்கூடாது என்று உணர்ச்சிப்பெருக்குடன் முடி வெடுத்தது கியூப அரசு.