மலேரியாவுக்கு மருந்தாக பயன்படும் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்து கொரோனா சிகிச்சைக்கு ஓரளவு பயன்படக்கூடும் என்ற அடிப்படையில் அமெரிக்க உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன. இந்த மருந்து உட்பட மருந்துப்பொருட்களை இந்தியாவிலிருந்து எந்தவொரு நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய மார்ச் 25 ஆம் தேதி மத்திய அரசு தடை விதித்தது. இந்த நிலையில் ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்தை தரவில்லையென்றால் இந்தியாவிற்கு உரிய பதிலடி கொடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பகிரங்கமாக மிரட்டியிருந்தார்.  இந்த மிரட்டல் வெளியானவுடனேயே மோடி அரசு ஹைட்ராக்சிகுளோரோகுயின் என்ற மருந்தை ஏற்றுமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுவிட்டதாகவும் பாராசிட்டமால் உள்ளிட்ட மருந்துகள் அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் என்று அறிவித்துள்ளது.

மனிதாபிமான அடிப்படையில் எந்தவொரு நாட்டுக்கும் மருந்து மற்றும் மருத்துவ உதவி செய்வது தவறல்ல. ஆனால் அமெரிக்க ஏகாதிபத்தியம் பகிரங்கமாக மிரட்டுவதும் நம்முடைய நாடு பணிந்துபோவதும் வெட்கக்கேடு.இந்த மருந்து நம்நாட்டின் தேவைக்கு போதுமான அளவு இருக்கிறதா என்பது குறித்து எதுவும் கூறாமல் உடனடியாக ஏற்றுமதிக்கு அனுமதியளிப்பது ஏன்?
கொரோனா பாதிப்பு அமெரிக்காவை கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கியுள்ளது. அங்கு ஏற்கெனவே மருத்துவம் முற்றிலும் தனியார்மயமாக்கப்பட்டுவிட்டதால் வசதி உள்ளவர்கள் மட்டுமே சிகிச்சை பெற முடிகிறது. அமெரிக்காவில் கோவிட் டெஸ்ட்டுக்கு ரூ.3 லட்சமும் சிகிச்சைக்கு ரூ.16 லட்சமும் தேவை. அங்கு மருந்து உற்பத்தியும் கார்ப்பரேட் கம்பெனிகளின் கையிலேயே உள்ளது. இந்தியாவில் உள்ள காப்புரிமை சட்டங்களும் , பொதுத்துறை நிறுவன மருந்து உற்பத்தியும்தான் ஓரளவு மலிவான விலையில் மருந்துகள் கிடைக்க காரணம்.அதையும் கொஞ்சம் கொஞ்சமாக கைவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.

உலக நாடுகளிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டிய அமெரிக்கா மிரட்டல் விடுக்கிறது. ஏற்கெனவே பல ஐரோப்பிய நாடுகளுக்கு செல்ல வேண்டிய மருந்துகளை அடாவடியாக அமெரிக்கா பறித்துக்கொண்டதாக ஜெர்மனி,கனடா உள்ளிட்ட நாடுகள் குமுறுகின்றன. இந்நிலையில் இந்தியா போன்ற நாடுகளிடம் மிரட்டி பிடுங்குகிறார் டிரம்ப். இதுதான் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குணம். ஒருவேளை இந்த மிரட்டலுக்கு இந்தியா அடிபணியாவிட்டால் கியூபா,வெனிசுலா,வடகொரியா,ஈரான் போன்ற நாடுகளுக்கு விதிக்கப்பட்டது போன்ற பொருளாதார தடை நம்நாட்டின் மீதும் விதிக்கப்படும். இதுதான் டிரம்ப் மிரட்டலின் பொருள். ஆனால் அமெரிக்காவை பகைத்துக்கொள்ளும் நிலையில் மோடி அரசு இல்லை.டிரம்ப் எள் என்றவுடன் எண்ணெய்யுடன் நிற்கிறார் மோடி.

இந்தியாவுக்கு 1.7 லட்சம் தற்காப்பு கவசங்களை அனுப்பியுள்ளது மக்கள் சீனம். தமிழ்நாடு உட்பட பல்வேறு மாநிலங்கள் சீனாவிடமிருந்து சோதனைக்கருவிகளை வாங்குகின்றன. ஆனால் சீனாவை நம்முடைய பகை நாடு போலவும் மிரட்டி பிடுங்கும் அமெரிக்காவை நட்புநாடு போலவும் இங்கே சிலர் மணியடித்து,விளக்கேத்திக் கொண்டிருக்கின்றனர். கியூபா உலகின் பல்வேறு நாடுகளுக்கு சோசலிச சகோதரத்துவ உணர்வுடன் மருத்துவர்களையும் மருந்துகளையும் அனுப்புகிறது. ஆனால் இன்றுவரை கியூபா மீதான பொருளாதாரத்தடையை அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும் நீக்கவில்லை. இராக் பேரழிவு ஆயுதங்களை வைத்திருப்பதாகக்கூறி பொருளாதார தடை விதித்து போர் தொடுத்தது அமெரிக்காவும் அதன் கூட்டாளி நாடுகளும்.போரில் இறந்த மக்களுக்கு நிகரான எண்ணிக்கையில் மருந்தின்றியும் பால் இன்றியும் குழந்தைகள் மாண்டனர். பென்சிலில் உள்ள கார்பனை கொண்டு குண்டு தயாரித்து விடுவார்கள் என்று கூறி அந்நாட்டு குழந்தைகளுக்கு பென்சில்கள் கூட மறுக்கப்பட்டன. அதுகுறித்து அமெரிக்கா கிஞ்சிற்றும் கவலை கொள்ளவில்லை.இப்போதும் கூட ஈரான்,ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளின் மீது அமெரிக்கா தடைவிதித்துள்ளது.

தன்னுடைய போர் மற்றும் பொருளாதார நலனுக்கு உடன்படாத நாடுகளின் மீது பொருளாதார தடை விதிப்பது அமெரிக்காவின் வழக்கம். இதனால் லட்சக்கணக்கான மக்கள் மாண்டுள்ளனர். இந்தியா அறிவியல் துறையிலும் மருத்துவத்துறையிலும் வளரக்கூடாது என்பதற்காக பல்வேறு தடைகளை அமெரிக்கா கடந்த காலத்தில் ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் பொது சுகாதாரத்துறை திட்டங்கள் இருப்பதால்தான் மக்களை காப்பாற்ற முடிகிறது. மனிதகுலத்தை நிரந்தரமாக அச்சுறுத்திக்கொண்டிருப்பது ஏகாதிபத்தியத்தின் கொள்ளை லாபவெறி எனும் பெருநோய். அந்த ஏகாதிபத்தியத்தின் மிரட்டல்களுக்கு அடிபணியாமல் நிமிர்ந்து நிற்பதுதான் தேசபக்தி. மணியடிப்பதும் விளக்கேற்றுவதும் அல்ல.

BSNL Employees Union Nagercoil