தகவல் தொழில்நுட்ப ஊழியர்களின் ஊதிய வெட்டு மற்றும் பணிநீக்கம் தவிர்க்கப்பட வேண்டும் என்று தேசிய ஐடி மற்றும் ஐடிஇஎஸ் தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு மத்திய அரசை வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து அமைப்பின் தேசிய கன்வீனர் கே.சி.கோபிகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

தேசிய ஐடி மற்றும் ஐடிஇஎஸ் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு (National Co-ordination Committie of IT & ITES Employees Unions (NCCITEU) கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரம், தெலுங்கானா, மேற்குவங்கம், தில்லி மற்றும் கேரளம் போன்ற மாநிலங்களில் செயல்படும் ஐடி தொழிற்சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு ஆகும். இது ஐடி, ஐடி சார்பு தொழில் மற்றும் இ- சேவை போன்ற துறைகளில் பணியாற்றும் ஊழியர்களின் பிரச்சனைகளில் தலையிட்டு வரும் அமைப்பாகும்.

கொரோனா தொற்று நோயினால் நாட்டில் தற்போது நிலவி வரும் ஊரடங்கு உள்ளிட்ட அசாதாரணச் சூழலில் ஏறத்தாழ 85 சதவீதத்திற்கும் மேற்பட்ட ஐடி மற்றும் ஐடிஇஎஸ் ஊழியர்கள் தங்களது வீட்டிலிருந்து பணி புரிந்து வருகின்றனர். இந்த ஊரடங்கு காரணமாக ஏற்படும் தொழில் மந்தம் ஆகியவற்றை காரணம் காட்டி ஐடி மற்றும் ஐடி சார்பு தொழில் ஊழியர்கள் அதாவது கால் சென்டர்கள், டாடா என்ட்ரி ஆபரேட்டர்ஸ் மற்றும் மென்பொருள் பொறியாளர்கள் மற்றும் கடைநிலை, பல்வேறு ஊழியர்களை நிர்வாகங்கள் வேலையிழக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக அறிகிறோம்.

அரசின் உத்தரவை மீறும் பெரும் நிறுவனங்கள்

மார்ச் 20 அன்று மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் நிர்வாகங்களுக்கு அனுப்பிய ஆலோசனை க்கடிதத்தில் ஊரடங்கு காலத்தில் ஊழியர்களுக்கு ஊதியம் வெட்டு மற்றும் வேலைநீக்கம் கூடாது என்று தெரிவித்துள்ளது. ஆனால் இதை பல பெரு நிறுவனங்கள் மதிக்காமல் அப்பட்டமாக மீறி வரும் நிலை ஏற்பட்டுள்ளது. பணிநீக்கம் செய்யப்படுவதும், ஊழியர்களின் எண்ணிக்கையைக் குறைப்பதும் மற்றும் ஊதிய வெட்டு போன்ற நடவடிக்கைகளினால் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமையை மிகத் தீவிரமாக மோசமாக மாறும். மேலும் ஐடி நிறுவனங்களின் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள பல்வேறு பழிவாங்கும் நடவடிக்கைகளை எடுக்க நேரிடும்.

ஆகவே ஐடி ஊழியர்களை ஒழுங்கமைத்தல் என்ற பெயரில் போனஸை வெட்டுவது, ஊதிய உயர்வை வழங்காமல் இருப்பது போன்ற நடவடிக்கைகளை எடுக்காமல் இருக்க வேண்டும். இந்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் வெளியிட்ட ஆலோசனையை பின்பற்றி நடக்க வேண்டும்.  மேலும் இந்த நெருக்கடி தீவிரமடையாமல் தடுக்க மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் ஆலோசனையை மீறும் நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை தகவல் தொடர்பு அமைச்சகம் எடுக்க வேண்டும்

வேலை நேரத்தை குறைத்திடுக!

அதே போன்று ஐடி மற்றும் ஐடிஇஎஸ் நிறுவனங்களின் அமைப்பான நேஸ்காம் தனது உறுப்பினர் நிறுவனங்களுக்கு ஊழியர்களை வேலைநீக்கம் மற்றும் ஊழியர்களை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்த வேண்டும். மேலும் ஊழியர்கள் வீடுகளில் இருந்து பணி செய்யும் போது பணிச் சுமையின் காரணமாக அவர்களுக்கு மன உளைச்சல் ஏற்படும் நிலை உள்ளது. ஆகவே ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு நிர்வாகங்கள் வேலை நேரத்தை ஆறு மணி நேரமாக குறைக்க வேண்டும், வீட்டில் பணி செய்யும் நேரத்தில் வேலை நேரம் முடிந்ததும் இணைப்பை துண்டிக்கும் உரிமையை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil