தமிழக BSNL நிறுவனத்தில் ஐயாயிரத்திற்கும்  மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் BSNL அலுவலகங்களில் பல்வேறு பணிகளுக்கு அங்கீகரிக்கப்பட்ட ஒப்பந்தகாரர்களின் மூலமாக பணியாற்றி வருகின்றனர். ஒப்பந்த ஊழியர்கள் வாங்ககூடிய குறைந்த சம்பளத்தை கடந்த ஒர் வருடத்திற்கு மேலாக நிலுவையில் வைத்துள்ளது BSNL நிர்வாகமும் அரசாங்கமும்.. பல்வேறு போராட்டங்களை நடத்திய பின்னரும் அதிகாரத்தில் இருப்பவர்கள் கேளா காதினராய் இருந்து வருகின்றனர். சென்னை உயர் நீதிமன்றத்தில் சம்பளம்  வழங்க கோரி வழக்கு தொடுக்கப்பட்டது. முப்பது சதவிகித சம்பளத்தை வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தது நீதிமன்றம். அதையும் நிர்வாகம் முழுமையாக அமுலாக்கவில்லை.
செய்த வேலைக்கு சம்பளம் மறுக்கப்பட்டு வருவதால் ஒப்பந்த ஊழியர்களின் குடும்பங்கள் பரிதவித்து வருகின்றனர். பல்வேறு மாநிலங்களில் பத்து ஒப்பந்த ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டனர்.
கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் ஐயாயிரத்திற்கு மேற்பட்ட நிரந்தர ஊழியர்களும் அதிகாரிகளும் விருப்ப ஓய்வில் சென்றுவிட்ட பின்புலத்தில் கூடுதலான பணிசுமைகளோடும்  கடுமையான பொருளாதார நெருக்கடியிலும் தங்கு தடையற்ற சேவையை மக்களுக்கு வழங்குவதற்கு ஒப்பந்த ஊழியர்கள் தொடர்ந்து  பணியாற்றி வருகின்றனர்.
தற்போது கொரோனா தொற்று காரணமாக அரசாங்கம் அறிவித்துள்ள ஊரடங்கு உத்தரவு ஒப்பந்த ஊழியர்களின் வாழ்வியவல் நிலைமைகளை மேலும் மோசமாக்கியுள்ளது.  அதையும் பொருட்படுத்தாமல் கொரோனா எதிர்ப்பு போராட்டத்தில் களப்பணியாற்றி வரும் சுகாதார துறையினருக்கும், மருத்துவமனைகளுக்கும், காவல் துறைக்கும் BSNL சேவை தடையில்லாமல் கிடைப்பதற்கு இந்த பேராபத்து காலத்திலும் தன்னுடைய வறுமையையும் புறந்தள்ளி தேச நலனுக்காக பணியாற்றி வருகின்றனர்.
இந்த இக்கட்டான கால சூழலை கணக்கில் எடுத்து அடிமட்ட தொழிலாளர்களின்  நிலுவை சம்பளத்தை வழங்க முன்வர வேண்டும் என்று BSNL நிர்வாகத்தையும், ஒப்பந்த ஊழியர்களை பட்டினி சாவிலிருந்து தடுக்க வேண்டும் என்று மத்திய அரசையும் இந்த தறுனத்தில் கேட்டுக்கொள்கிறோம்.