BSNL ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யாதே..
தமிழக BSNL நிறுவனத்தில் 5,000க்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர்.  நிரந்தர ஊழியர்களுக்கு கொடுக்கும் ஊதியத்தில் ஐந்தில் ஒரு பங்குக்கு குறைவாகவே இவர்களுக்கு ஊதியம் கொடுக்கப்பட்டு வருகின்றன. BSNL நிர்வாகம் தனது நிதி நிலையினை காரணம் காட்டி கடந்த ஒரு வருட காலமாக அவர்களுக்கு ஊதியம் தருவதில் பெரும் சுணக்கம் காட்டி வருகிறது.. அனைத்து ஒப்பந்த தொழிலாளர்களுக்கும், பத்து மாத காலத்திற்கும் மேல் ஊதியம் வழங்கப்படவில்லை.  குறிப்பாக நாகர்கோவில் மாவட்டத்தில் ஒரு பகுதி தொழிலாளர்களுக்கு 14 மாத காலத்திற்கு மேல் ஊதியம் வழங்கப்படவில்லை. இதற்காக அந்த தொழிலாளர்கள் பலமுறை முறையிட்டும், பல கட்ட போராட்டங்கள் நடத்தியும்,  பாராளுமன்றத்தில் குரல் எழுப்பிய பின்னரும் கூட அவர்களுக்கு ஊதியம் தரப்படவில்லை.  இன்னமும் நிலுவையில் உள்ளது.
இந்த சூழ்நிலையில், கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி முதற்கொண்டு நம் நாட்டில் கொரோனா தொற்று நோய் காரணமாக மத்திய அரசு ஊரடங்கு அறிவித்துள்ளது. இந்த சூழ்நிலையில், தமிழக BSNL நிர்வாகம், அனைத்து மாவட்டங்களிலும் ஊதியம் இல்லாவிட்டாலும், தற்போது பணியாற்றிக் கொண்டுள்ள ஒப்பந்த ஊழியர்களை பணியில் இருந்து விரட்ட முயற்சிக்கின்றது.  ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு ஒப்பந்த தொழிலாளியையும் வேலையை விட்டு நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசாங்கம் உத்தரவிட்ட போதும், மத்திய அரசுக்கு சொந்தமான BSNL நிறுவனத்தில் பணியாற்றி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை புதிய முறையிலான டெண்டர் என்று கூறி அவர்களை பணி நீக்கம் செய்ய முயற்சிக்கின்றது.  சுமார் ஒரு வருட காலமாக ஊதியத்தை தராமல் இருப்பதுடன், அவர்களை பணியில் இருந்து விரட்டுவது என்பது மனிதாபிமானமுள்ள எவரும் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று.
தமிழகத்தில் நாகர்கோவில், விருதுநகர், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி ஆகிய SSA-க்களுக்கு பொறுப்பான நிர்வாகமும், கோவை மற்றும் நீலகிரி ஆகிய SSA-க்களுக்கு பொறுப்பான நிர்வாகமும் தான் இந்த விஷயத்தில் மிக முக்கியமான பாத்திரம் வகித்து வருகின்றன.  இவர்களுக்கு தமிழக நிர்வாகம், மனிதாபிமானமற்ற முறையில் ஆதரவு தருகிறது. இந்த மோசடியை அமல்படுத்த மறுக்கும் மற்ற அதிகாரிகளையும் மாநில நிர்வாகம் மிரட்டி அமல்படுத்த முயற்சிக்கின்றது.
புதிய டெண்டர் முறையில், டெண்டர் எடுத்தவருக்கு இந்த ஊரடங்கு காலத்திலேயே, அவர் SECURITY DEPOSIT கட்டினாலும் சரி, கட்டாவிட்டாலும் சரி என்று டெண்டர் வழங்கப்படுகிறது.  டெண்டர் எடுத்தவரோ அல்லது அவரது நிர்வாகியோ எடுத்த பணிகளுக்கு ஆட்களை நியமிக்கக்கூட இயலாத வண்ணம் ஊரடங்கு இருக்கும் போதும், வேண்டும் வேண்டும் என்றே நிர்வாகம் அவர்களுக்கு டெண்டர் கொடுப்பதன் நோக்கம் என்ன?
ஊரடங்கு காலத்தில், எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம், யாரும் கேட்க முடியாது என்ற மனிதாபிமானமற்ற எதேச்சதிகார போக்கு தான் காரணம். பல வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு போராடி வந்த நாங்களும், சமூக தொற்றிலிருந்து பாதுகாக்க வேண்டும் என்பதற்காக போராட இயலாத சூழலை பயன்படுத்தி, பரிதாபகரமாக வாழ்க்கையை நடத்தி வரும் ஒப்பந்த தொழிலாளர்களை வேலை செய்த நாட்களுக்கு ஊதியமும் தராமல், அவர்களை பணியில் இருந்து விரட்டுவதற்காக தமிழக BSNL நிர்வாகம் முயற்சி செய்து வருகிறது.
BSNL நிர்வாகம் ஒப்பந்த ஊழியர்களின் கீழ்க்கண்ட  கோரிக்கைகளை ஏற்காவிட்டால் நோய் தொற்று காலத்திலும் போராட்டங்களை தவிற்க இயலாது.
ஒப்பந்த தொழிலாளர்கள் எவரையும் பணி நீக்கம் செய்யக் கூடாது.
நிலுவையில் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கிட வேண்டும்.
பாதிக்கப்பட்டுள்ள ஒப்பந்த தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யும் வகையில் அறிவிக்கப்பட்டுள்ள புதிய டெண்டர் முறையை ரத்து செய்து பழைய நிலையே தொடர வேண்டும்.
சி.வினோத்
மாநில செயலாளர்

BSNL Employees Union Nagercoil