தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து முதலாளிகளுக்கு விலக்கு

உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய மாநில அரசாங்கங்கள்  வேலையளிப்பவர்கள் அனைவருக்கும் தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து மூன்று ஆண்டு காலம் விலக்கு அளித்திருப்பதற்கு மத்தியத் தொழிற்சங்கங் கள் மற்றும் சம்மேளனங்கள்/சங்கங்களின் கூட்டு மேடை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங்கள் மற்றும் சம்மேளனங்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை யில் மேலும் கூறியிருப்பதாவது:

உத்தரப்பிரதேச அரசாங்கம் ஏற்கெனவே இது தொடர்பாக ஓர் அவசரச் சட்டம் நிறைவேற்றி இருக்கிறது. இதேபோன்று மத்தியப் பிரதேச அரசாங்கமும் நிறைவேற்ற இருக்கிறது. குஜராத்திலும் 1200 நாட்களுக்கு, அதாவது 3 ஆண்டு காலத்திற்கு, முதலாளிகளுக்கு தொழிலாளர் நலச்சட்டங்களிலிருந்து விலக்கு அளிக்கப்பட இருக்கிறது என்று ஊடகங்களில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

கடந்த 45 நாட்கள் சமூக முடக்கம், உழைக்கும் மக்களின் பெரும்பான்மையானவர்கள் வேலையிழப்பு, ஊதிய இழப்பு, தங்குமிடங்களிலிருந்து வெளியேற்றம் போன்ற வற்றால் சொல்லொண்ணா துன்ப துயரங்களுக்கு ஆளாகியிருப்பதுடன், அவர்களை பசி-பஞ்சம்-பட்டினி நிலைக்கும் தள்ளியிருக்கிறது. இப்போதுள்ள மத்திய அரசாங்கம் இவ்வாறு தன் கோரமான நடவடிக்கைகளின் விளைவாக அவர்களை அடிமை நிலைக்குத் தள்ளியிருக்கிறது.

விரக்தியின் நிலைக்குத் தள்ளப்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் வீடுகளை நோக்கி ஆயிரக்க ணக்கான மைல்கள் சாலைகள் வழியாகவும், ரயில்வே டிராக்குகள் வழியாகவும், காடுகள் வழியாகவும் நடந்தே சென்று கொண்டிருக்கிறார்கள். போகும் வழியிலேயே தாங்கள் உயிருக்குயிராய் நேசித்துவந்த குழந்தைக ளையும், உற்றார்களையும் பசியின் கொடுமைக்கும், பல்வேறு விபத்துக்களுக்கும் பலி கொடுத்துவிட்டும் சென்றுகொண்டிருக்கிறார்கள். இந்த நிலையில் இப்போது மத்திய பாஜக அரசாங்கம் தன் கட்சியின்கீழ் இயங்கும் மாநில அரசாங்கங்களை தொழிலாளர் விரோத, மக்கள் விரோத எதேச்சதிகார நடவடிக்கைகளை எடுத்திட கட்டளை பிறப்பித்திருக்கிறது. இதர மாநில அரசாங்கங்களும் இதனைப் பின்தொடரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆறு மாநில அரசாங்கங்கள் தொழிலாளர்களின் வேலை நேரத்தை 8 மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக மாற்றியிருக்கின்றன. இதனைத்தொடர்ந்து மேற்கண்ட வாறு பாஜக மாநில அரசாங்கங்கள் இவ்வாறு முதலாளிக ளுக்கு தொழிலாளர் நலச் சட்டங்களிலிருந்து விலக்கு அளித்திருக்கிறது. திரிபுரா பாஜக அரசாங்கமும் இதே போன்ற நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

இதனை மத்திய தொழிற்சங்கங்கள், தொழிலாளர்கள் மீது ஏவப்பட்டுள்ள குற்றம் மற்றும் மிருகத்தனமான நடவடிக்கை என்று கருதுவதுடன், சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்தின் சட்டவிதிகளை மீறும் செயல்கள் என்றும் கருதுகிறது. மத்திய அரசாங்கம் மற்றும் பல்வேறு மாநில அரசாங்கங்களின் இத்தகைய தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனத்திடம் வழக்கு தொடுப்பது குறித்து ஆழமாகப் பரிசீலித்துக் கொண்டிருக்கிறோம்.

அதே சமயத்தில் தொழிலாளர்களை அடிமை நிலைக்குத் தள்ள முயலும் மத்திய அரசு மற்றும் பல்வேறு மாநில அரசுகளின் இத்தகைய இழி நடவடிக்கைகளுக்கு எதிராக, நாட்டிலுள்ள அனைத்துத் தொழிலாளர்களும், ஊழியர்களும் தாங்கள் வேலை செய்யும் இடங்களிலும் மற்றும் தேசம் தழுவிய அளவிலும் ஒன்றுபட்டு நின்று கிளர்ச்சிப் போராட்டங்களில் ஈடுபட வேண்டும் என்று அறைகூவி அழைக்கிறது.

ஏற்கனவே பல இடங்களில் இதுபோன்று போராட்டங்கள் தன்னிச்சையாகவே நடைபெற்றிருப்பதற்கு பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.

இவ்வாறு மத்திய தொழிற்சங்கங்கள், ஊழியர் சம்மேளனங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளன. இதில் ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐயுடியுசி,  டியுசிச, எஸ்இடபிள்யு, ஏஐசிசிடியு, தொமுச, யுடியுசி மற்றும் சம்மேளனங்கள் கையெழுத்திட்டுள்ளன.

BSNL Employees Union Nagercoil