காணொளி மூலமாக 15.06.2020 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் மத்திய செயலகக் கூட்டத்தில் கீழ்கண்ட பிரச்சனைகளை வலியுறுத்தி, நாடு முழுவதும், 26.06.2020 அன்று சமூக இடைவெளியை கடைபிடித்து தர்ணா போராட்டம் நடத்திட முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

1) BSNLன் 4G சேவைகளை துவக்குவதில் கால தாமதம்:-
23.10.2019 அன்று மத்திய அரசு BSNLக்கான ஒரு புத்தாக்க திட்டத்தை அறிவித்தது. அந்த திட்டத்தின் படி விருப்ப ஓய்வு திட்டத்தின் கீழ் 79,000 ஊழியர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர். BSNLன் புத்தாக்கத்திற்காக அறிவிக்கப்பட்ட திட்டங்களில் விருப்ப ஓய்வு திட்டத்தை தவிர வேறு எதுவும் அமலாக்கப்படவில்லை. மிக முக்கியமாக இதுவரை BSNL, தனது 4G சேவைகளைக்கூட துவக்கவில்லை. BSNL, 4G சேவைகளை துவக்குவதை தடுப்பதற்கான சதித்திட்டங்களும் அரங்கேறியுள்ளன.

2) பிரச்சனைகளை தீர்வு காணாத BSNL நிர்வாகம்:-
ஊழியர்களின் துயரங்களை BSNL நிர்வாகம் கண்டுக் கொள்ளாமலேயே உள்ளது. ஊழியர்களுக்கான ஊதியம் உரிய தேதியில் வழங்கபடுவதில்லை. இந்த கொரோனா தொற்று அபாய காலக் கட்டத்திலும், BSNL ஊழியர்களுக்கு கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை கிடைப்பதில்லை. தற்போது இருக்கும் மருத்துவ வசதிகளும் பறிக்கப்படுகின்றன. ஊழியர்களின் ஊதியத்தில் பிடித்தம் செய்யப்பட்ட இன்சூரன்ஸ் மற்றும் சொசைட்டிக்கான பிடித்தங்கள், உரிய மட்டங்களுக்கு அனுப்பப்படவில்லை. கடந்த ஒரு வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களுக்கு ஊதியம் தரப்படாததோடு, தற்போது அவர்கள் பெருமளவில் பணி நீக்கமும் செய்யப்படுகின்றார்கள். ஊழியர்களுக்கு GTI அமலாக்குவது மற்றும், JTO இலாகா தேர்வில் தளர்வு ஆகிய பிரச்சனைகள் அதீதமாக கால தாமதப்படுத்தப்படுகின்றன. சுருக்கமாக சொல்ல வேண்டும் என்றால், ஊழியர்களின் எந்த ஒரு பிரச்சனையையும் BSNL நிர்வாகம் தீர்வு காண்பதில்லை. ஊழியர்களின் துயரங்களின் மீது BSNL நிர்வாகம் பாராமுகமாகவே உள்ளது.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள இந்த சூழ்நிலையில், 26.06.2020 அன்று நாடு முழுவதும், சமூக இடைவெளியை கடைபிடித்து தர்ணா போராட்டங்களை நடத்த வேண்டும் என மத்திய செயலக கூட்டம் முடிவு செய்துள்ளது. கொரோனா தொற்று அபாயத்தின் காரணமாக பெரிய நகரங்களில் 10 முதல் 15 தோழர்கள் மட்டும் இந்த தர்ணாவில் பங்கேற்க வேண்டும். மற்ற இடங்களில் 5 தோழர்கள் மட்டும் பங்கேற்க வேண்டும். கோரிக்கை அட்டைகளை பார்வைக்கு வைக்க வேண்டும். ஊடக நண்பர்களுக்கு தகவல் கொடுத்து, நிகழ்ச்சிகள் ஊடகங்களில் வருவதை உறுதி செய்ய வேண்டும்.

BSNL Employees Union Nagercoil