ஓசிஎப் உட்பட 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை பெரும் முதலாளிகளான அம்பானி, அதானிகளிடம் விற்க முயற்சிக்கும் பாஜகவின் மோடி அரசைக் கண்டித்தும் பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேசனாக மாற்றும் வரைவுத் திட்டங்களை உருவாக்க ஆலோசகரை நியமிக்க  தான் தோன்றித்தனமாக மத்திய அரசு உத்தர விட்டுள்ளதைக் கண்டித்தும்  காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட பாது காப்புத்துறை ஊழியர்கள் முடிவுசெய்துள்ளனர். இதுகுறித்து அகில இந்திய பாது காப்புத்துறை ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச்செயலாளர் சி. ஸ்ரீகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

கோவிட் – 19 நோய்க்கிருமி பரவலின் ஆபத்தில் நாடே அஞ்சிக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இதுதான் சந்தர்ப்பம் என மத்திய மோடி அரசு தொழிலாளர்களுக்கு எதிரான, பொதுத்துறை நிறுவனங்களுக்கு எதிரான அரசுத் துறை நிறுவனங்களுக்கு எதிரான குறிப்பாக அனைத்து உழைப்பாளி மக்களு க்கும் எதிரான பல்வேறு முடிவுகளை கோவிட் – 19 நிவாரணம் எனும் பெயரில் அறிவித்து  அதை அமல்படுத்துகின்ற பணிகளை தீவிர மாக செய்து வருகின்றது. பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளை கார்ப்பரேஷனாக, பொதுத்துறை நிறுவனமாக மாற்றி அதை பங்கு மார்க்கெட்டில் விற்கின்ற முடிவையும் மத்திய அரசு அறிவித்து அதை அமல்படுத்து வதற்கான பணிகளை செய்து வருகின்றது. தொழிலாளர்களையும், அவர்கள் சங்கங் களையும் கலந்து பேசித்தான் முடிவெடுத்தோம் என்று காட்டுவதற்காக எச்எல்ஓசி எனும் அமைப்பை ஏற்படுத்தி பேச்சுவார்த்தை எனும் நாடகத்தை தொடர்ந்து அரங்கேற்றி வருகிறது.

மத்திய அரசுக்கு எதிராக  99 சதவீத தொழிலாளர்கள் 

மத்திய அரசின் சதித்திட்டத்தை அறிந்த சம்மேளனங்கள் எச்எல்ஓசி  கூட்டங்களை புறக் கணித்தது. மேலும் மத்திய அரசு கார்ப்பரேஷன் முடிவை திரும்பப் பெற வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி பல்வேறு போராட்ட ங்களும், வேலை நிறுத்த வாக்கெடுப்பும் நடை பெற்று 99 சதவீதத்திற்கும் மேற்பட்ட தொழிலா ளர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இந்த சூழ்நிலை யில் தற்போதைய நாட்டின் கோவிட் – 19  சூழ்நிலை, பொருளாதார நெருக்கடி, எல்லைப் பகுதி பதற்றம் ஆகியவற்றை கவனத்தில் எடுத்து பிரதமர் கார்ப்பரேஷன் முடிவை திரும்பப் பெற வேண்டுமென சம்மேளனங்கள் பிர தமருக்கு கடிதம் அனுப்பியுள்ளன.

இதுவரை யிலும் அக்கடிதத்தின் மீது எந்த நடவடிக்கை யும் எடுக்காத நிலையில் ஜூலை 6 அன்று பாது காப்புத்துறை தொழிற்சாலைகளை கார்ப்ப ரேஷனாக மாற்றி அமைப்பதற்கான வரைவுத் திட்டங்களை உருவாக்குவதற்கு ஆலோ சகர்கள், ஆலோசனை நிறுவனங்களை நிய மனம் செய்வதற்கான உத்தரவை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் 4 ஆம் தேதிக்குள் இதற்கான டெண்டர் இறுதியாக்கப்பட்டு ஓராண்டிற்குள் இரண்டு கட்டமாக (6 மாதத் திற்கு ஒருமுறை) தங்களுடைய வரைவுத் திட்டங் களை இறுதிப்படுத்தி அரசிடம் ஒப்படைக்க வேண்டுமென மத்திய அரசு அறிவித்துள்ளது. ஒருபக்கம் எச்எல்ஓசி கூட்டங்கள் எனும் நாடகம், மற்றொரு பக்கம் கார்ப்பரேஷனை அமல்படுத்து வதற்கான தீவிரத் திட்டங்கள், மத்திய அரசின் நோக்கம் தெளிவாகப் புரிந்துவிட்டது. எனவே மோடி அரசின் சதித்திட்டத்தை முறி யடிக்க நாம் தொடர்ந்து ஒன்றுபட்டு போராட வேண்டியுள்ளது.

அம்பானி-அதானிகளிடம் ஒப்படைக்க அனுமதியோம்

ஜூலை 3 ஆம் தேதியன்று தொழிற்சாலை விடுமுறையாக இருந்தபோதிலும் அன்றைய தினம் நூற்றுக்கும் மேற்பட்ட அனைத்து சங்க முன்னணி தோழர்களும், சகோதரிகளும் கார்ப்ப ரேஷன் ஆபத்தை எதிர்த்து தொழிலக நுழைவு வாயிலில் குரல் எழுப்பினர். 41 தொழிற்சாலை களிலும் இப்போராட்டம் வெற்றிகரமாக நடை பெற்றது. தொடர்ந்து காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்பினை தீவிரப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். மோடி அரசின் தொழிலாளர் விரோத  கொள்கை களை முறியடிக்க  தொடர்ந்து ஒன்றுபட்டு போராடு வோம். பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகள் நாட்டு மக்களின் சொத்து. அதனை அம்பானி களிடமும், அதானிகளிடமும் ஒப்படைக்க அனுமதியோம். பெருந்தலைவர் காமராஜர், இடம் கொடுத்தது ஓசிஎப்  தொழிற்சாலை கட்டு வதற்காக, அதை பெரு முதலாளிகளுக்கு பிளாட் போட்டு விற்பதற்காக அல்ல. ஓசிஎப் உட்பட 41 பாதுகாப்புத்துறை தொழிற்சாலைகளும் நாட்டி ன் பாதுகாப்பிற்கே தவிர விற்பதற்கு அல்ல.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil