உலகெங்கிலும் கொரோனா தொற்று பரவல் மற்றும் மரண விகிதங்கள் அதிகரித்துள்ள நிலையில்  30க்கும் மேற்பட்ட நாடுகளில் கியூபாவின் மருத்து வர்கள், மனிதகுலத்தை காப்பாற்றும் மகத்தான மருத்துவ சேவையை ஆற்றி வரும் நிலையில், ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்றுள்ள அமெரிக்க ஏகாதிபத்தியம், கியூபாவிற்கு எதிரான தனது தடை களையும் கட்டுப்பாடுகளையும் மேலும் கடுமை யாக்கியுள்ளது. இதன் விளைவாக கியூபா அஞ்சி நடுங்கிவிடும் என்று அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்பார்க்கிறது. ஆனால் நாங்கள் ஒரு போதும் ஏகாதிபத்தியத்திடம் அஞ்சி நடுங்கப்போவதில்லை; அவர்களிடம் மண்டியிடப்போவதில்லை; இந்தப் போராட்டத்தை இன்னும் உத்வேகத்துடன் எடுத்துச் செல்லும் மகத்தான வரலாறு எங்களுடையது என்று கியூப ஜனாதிபதியும் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினருமான மிகுயேல் தியாஸ் – கேனல் பெர்முடேஸ் முழங்கி யுள்ளார். தற்போதைய உலக சூழலில் சோசலிச கியூபா வின்  தேசிய செயல்திட்டம் பற்றி அந்நாட்டின் அமைச்சரவை விவாதித்து வருகிறது.

இதுதொடர்பாக நடைபெற்ற இறுதி விவாதத்தைத் தொடர்ந்து அந்நாட்டின் தொலைக் காட்சியில் உரையாற்றிய ஜனாதிபதி தியாஸ் கேனல், கியூபாவுக்கு எதிராக அமெரிக்க ஏகாதி பத்தியம் தனது தடைகளையும் கட்டுப்பாடு களையும் இந்தக் காலக்கட்டத்தில் இன்னும் கடுமை யாக்கியிருப்பதை விவரித்தார். நவீன தாராளமயக் கொள்கைகள் உலகளாவிய முறையில் மீளமுடி யாத கடும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், கொரோனா தொற்று எனும் பயங்கரம் வந்து  சேர்ந்தது; இதை எதிர்கொள்வதற்கு மாறாக  அமெரிக்கா நம்மைப்போன்ற நாடுகளின் மீது கடுமையான தாக்குதலை கட்டவிழ்த்து விட்டிருக்கிறது; இந்நிலையில், தொற்று நோயை யும் ஏகாதிபத்தியத்தின் தாக்குதலையையும் எதிர்கொள்ள அறிவியல் பூர்வமான வளர்ச்சியை நோக்கி முன்னேறிச் செல்ல வேண்டியதும், சோசலிச சித்தாந்தத்தை அனைத்து தளங்களிலும் இன்னும் உறுதியான முறையில் அமலாக்குவதற்கான வழி களை ஆராய்வதும், கியூப சமூகத்தின் அனைத்து மட்டங்களிலும் சமூக நீதியை உறுதி செய்வதையும், ஒட்டுமொத்த கியூப மக்களின் வளர்ச்சியை உறுதிப் படுத்துவதிலும் நமது அரசின் முழுமையான கவனம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்.

நவீன தாராளமயக் கோட்டை தகர்கிறது
“சர்வதேச அளவில் முதலாளித்துவம் மிக மிக ஆழமான நெருக்கடியில் சிக்கியிருக்கிறது. அந்த நெருக்கடி விரிவடைந்துகொண்டே செல்கிறது. இந்தத் தருணத்தில் வந்துள்ள கொரோனா பாதிப்பு, ஏகாதிபத்தியத்தின் நவீன தாராளமயக் கோட்டையை முற்றாகத் தகர்த்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் ஏகாதிபத்தியம் தனது மேலாதிக்கத்தை நிலைநாட்டுவதற்காக இன்னும் வெறித்தனமான நட வடிக்கைகளில் இறங்குகிறது. பல்வேறு நாடுகளின் அரசாங்கங்கள் மீது நிர்ப்பந்தங்களை நிரந்தரப் படுத்துவது, அந்த நாடுகளில் ஜனநாயகம் கொண்டு வருவது என்ற பெயரில் அத்துமீறி தலையிடுவது, வன்முறைகளை கட்டவிழ்த்துவிடுவது, ராணுவத் தாக்குதல் நடத்துவோம் என்று மிரட்டுவது என எல்லாவிதமான முயற்சிகளையும் ஏகாதிபத்தியம் கைக்கொண்டிருக்கிறது; கியூபாவும் வெனிசுலாவும் அதற்கு நேரடி சாட்சியமாக இருக்கின்றன” என்று தியாஸ் கேனல் விவரித்தார்.

கியூபா மீது போர்
உலகம் ஒரு கடுமையான சூழலில் இருக்கும் நிலையில், கியூபா உள்ளிட்ட பல நாடுகளின் மீதான பொருளாதாரத் தடைகளை அமெரிக்க ஏகாதிபத்தியம் மேலும் மேலும் வலுப்படுத்துகிறது என குற்றம்சாட்டிய தியாஸ் கேனல், “கியூபா மீதான பொருளாதாரத் தடைகளை அனைத்து தளங்களிலும் அமெரிக்கா விரிவுபடுத்தியிருக்கிறது; நமது நிதி  ஆதாரங்கள் அனைத்தையும் நிரந்தரமாக முடக்கு வதற்கு முயற்சி செய்கிறது; சர்வதேச அளவிலான கியூபாவின் வங்கிக் கணக்குகளை முடக்கி யிருக்கிறது. சர்வதேச நாடுகளில் பணியாற்றும் கியூப அரசின் அதிகாரிகளை திருப்பி அனுப்புவது அல்லது அனைத்துவிதமான இடையூறுகளை செய்வது; கியூப நிறுவனங்கள் மீதான தடைகள் மற்றும் கியூபாவுக்கு பொருட்கள் ஏற்றுமதி செய்யும் உலக நிறுவனங்கள் மீதான தடைகள் மற்றும் கியூபா வுடன் பொருளாதார உறவுகள் கொண்டுள்ள நாடுகள் மீதான நிர்ப்பந்தங்களை அதிகரிப்பது என ஒரு துறை கூட விடாமல் ஒரு மிகப்பெரிய போரையே  கியூபா மீது ஏகாதிபத்தியம் நடத்திக் கொண்டி ருக்கிறது” என்றும் விவரித்தார்.

இதன் விளைவாக அடிப்படையான – அத்தியா வசியப்பொருட்கள், உணவு, மருந்து, உள்ளிட்ட வற்றை பிற நாடுகளிலிருந்து கியூபாவால் இறக்குமதி செய்ய முடியவில்லை எனத் தெரிவித்த தியாஸ்  கேனல், மனித வாழ்வின் ஒவ்வொரு அத்தியா வசியத் தேவையையும் கியூபா, வேறு வழியே யின்றி உள்நாட்டிலேயே தயாரிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது என்றும் தெரிவித்தார்.  தடைகள் ஒருபுறம், இதன் விளைவாக உள்நாட்டில் சிற்சில சக்திகளை தூண்டிவிட்டு கியூப  அரசுக்கு எதிராக கலகம் செய்வதற்கான முயற்சியை யும் அமெரிக்க ஏகாதிபத்தியம் மேற்கொண்டிருக் கிறது என சுட்டிக்காட்டிய தியாஸ் கேனல், எனினும், கியூப அரசு விரிவான திட்டங்களை வரையறை செய்து கொண்டிருக்கிறது; ஒட்டுமொத்த மக்களின் நல்வாழ்வை உறுதி செய்வதில் உறுதியாக இருக் கிறது; மக்களின் அனைத்துவிதமான கருத்துக் களையும் காது கொடுத்துக் கேட்கிறது; அவற்றில் சிறந்தவற்றுக்கு முழுமையான மதிப்பளித்து செயல்படுத்துகிறது என்றும் குறிப்பிட்டார்.

மருத்துவ சாதனை
மேலும், சுகாதார நெருக்கடி உலகையே உலுக்கிக் கொண்டிருக்கும் தருணத்தில் கியூபா வின் சுகாதார கட்டமைப்பு உலகின் அனைத்து நாடு களையும் விட வலுவானதாக மாறியிருக்கிறது; உல கின் பல நாடுகளில் எமது மருத்துவர்கள் கொரோனா  பரவலை தடுத்து நிறுத்துவதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்கள்; மருந்து, உணவு, இதர நுகர்பொருட்களை உள்நாட்டிலேயே அதிகபட்ச மாக உற்பத்தி செய்வதற்கான தீவிர நடவடிக்கை களை கியூப அரசு மேலும் முன்னெடுத்துச் செல்லும் என்றும் அவர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

BSNL Employees Union Nagercoil