BSNLன் நிலங்கள் விற்கப்பட வேண்டும் என்பது நமது (BSNLEU/AUAB) கோரிக்கையே அல்ல என்பதை தெளிவாக்கிட விரும்புகிறோம். BSNLன் காலியிடங்களையும், கட்டிடங்களையும் வாடகைக்கோ அல்லது குத்தகைக்கோ விட்டு நிதி திரட்ட வேண்டும் என்கிற BSNLன் நில மேலாண்மை கொள்கைக்கு தொலை தொடர்பு துறை ஒப்புதல் வழங்க வேண்டும் என்பதே AUABயின் கோரிக்கை. ஆனால், 23.10.2019 அன்று அரசு அறிவித்த புத்தாக்க திட்டத்தில், BSNLன் சொத்துக்களை விற்பனை செய்வது என அறிவிக்கப்பட்டது.

இந்த பிரச்சனையில் BSNLல் உள்ள ஒவ்வொரு தொழிலாளியும், சங்கங்களும் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். ஏனெனில், BSNLன் சொத்துக்களை எல்லாம் அடிமாட்டு விலைக்கு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். 2014ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின், ஏழை விவசாயிகளின் நிலங்களை எடுத்து கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்த்திட 3 அவசர சட்டங்களை போட்டார்கள் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது. எனினும், விவசாயிகளும், ஜனநாயக சக்திகளும் நடத்திய நாடு தழுவிய உறுதியான போராட்டங்கள் மோடி அரசாங்க்த்தின் அந்த முயற்சிகளை முறியடித்தன. எனவே, அது போன்ற நில அபகரிப்பு முயற்சிகள் BSNLலிலும் நடைபெறலாம்.

எனவே நில பேரங்கள் அனைத்தும் வெளிப்படையாக நடைபெறுவதை நாம் உறுதி செய்ய வேண்டும். இந்த நிலங்களை காசாக்கும் முயற்சிகளில், நமது நிலங்கள் அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டுவிடாமல், சந்தை விலையிலேயே விற்கபடுவதை உறுதி செய்திட BSNLன் ஒவ்வொரு ஊழியரும், சங்கங்களும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும். இதனை உறுதிப்படுத்திட ஒவ்வொரு ஊழியரும், தொழிற்சங்கங்களும், அதிகாரிகள் சங்கங்களும் எச்சரிக்கையோடு இருக்க வேண்டும் என 20.07.2020 அன்று நடைபெற்ற அகில இந்திய மையக் கூட்டம் அறைகூவல் விடுத்துள்ளது.

டவர்களையும், ஃபைபர்களையும் காசாக்கும் அரசின் முயற்சி BSNLக்கு ஆபத்தானது

23.10.2019 அன்று அறிவிக்கப்பட்ட BSNL மற்றும் MTNL ஆகியவற்றின் புத்தாக்க திட்டத்தில், வலைத்தள மேம்பாடு, கடன்களை திருப்பி செலுத்துதல், செயல்பாட்டு நிதி தேவை ஆகியவற்றிற்க்கன செலவுகளை செய்ய தேவையான நிதியினை திரட்டுவதற்கு, அவற்றின் சொத்துக்களை காசாக்கப்படும் என்று கூறப்பட்டது. BSNL வசம் உள்ள உபரி இடங்களைத்தான் அவர்கள் காசாக்கப்படும் சொத்துக்கள் என்று கூருகிறார்கள் என நாம் நினைத்தோம்.

ஆனால் பிரதமரின் முதன்மை ஆலோசகர் தலைமையில் 03.07.2020 அன்று நடைபெற்ற கூட்டத்தில், BSNLன் டவர்கள் மற்றும் ஃபைபர்கள் ஆகியவற்றை காசாக்குவது தொடர்பான ஒரு முக்கியமான விவாதம் நடைபெற்றுள்ளது. அந்தக் கூட்டத்தில் BSNLன் டவர்கள் மற்றும் ஃபைபர்களை காசாக்குவது தொடர்பான முன்மொழிவுகளோடு மூன்று மாதங்களில் தொலை தொடர்பு துறை வர வேண்டும் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் இந்த முடிவு மிக மிக ஆபத்தானது. தொலை தொடர்பு துறையில் தான் மட்டுமே இருக்க வேண்டும் என மிக ஆக்ரோஷமாக ரிலையன்ஸ் ஜியோ செயல்பட்டுக் கொண்டிருக்கும் இந்த சூழ்நிலையில், BSNLன் சொத்துக்களை காசாக்குதல் என்ற பெயரில், BSNLன் டவர்களையும், ஃபைபர்களையும் முகேஷ் அம்பானிக்கு தாரை வார்க்க அரசு நினைக்கின்றது.

BSNLன் டவர்கள் மற்றும் ஃபைபர்கள் கொள்ளை போவதை தடுக்க, நமது மத்திய சங்கம், AUAB மூலம் கடுமையான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என 20.07.2020 அன்று நடைபெற்ற BSNL ஊழியர் சங்கத்தின் அகில இந்திய மையக் கூட்டம் கேட்டுக் கொண்டுள்ளது.

BSNL Employees Union Nagercoil