2020 ஜூன் மாத ஊதியம் தொடர்பாக தொடர்ச்சியாக தோழர்கள் மத்தியில் இருந்து கேள்விகள் எழுந்து வருகின்றன. உரிய தேதியில் ஊதியம் தர வேண்டும் என்பதும், 2020, ஜூலை 16ஆம் தேதி நடைபெற்ற கருப்புக் கொடி ஏந்திய ஆர்ப்பாட்டத்தின் முக்கியமானதொரு கோரிக்கையாக இருந்தது. இந்த முக்கியமான பிரச்சனையின் மீது ஒன்றுபட்ட போராட்டம் நடைபெற்ற பின்னரும், உரிய தேதியில் ஊதியம் தருவது தொடர்பாக BSNL நிர்வாகம் அக்கறை செலுத்தவில்லை.

இது தொடர்பாக 23.07.2020 அன்று BSNL ஊழியர் சங்கத்தின் பொதுச்செயலர் தோழர் Pஅபிமன்யு, DIRECTOR(Finance) திரு S.K.குப்தா அவர்களை தொடர்பு கொண்டு விவாதித்தார். மாதந்தோறும் 1,300 கோடி ரூபாய்களுக்கு மேல் வருவாய் இருந்த போதும், நிறுவனத்தின் செலவுகள் அதை விட அதிகமாக இருப்பதால், உரிய தேதியில் ஊதியம் வழங்க இயலவில்லை என்று அவர் பதிலளித்தார்.

வியாபார நடவடிக்கைகளை முன்னெடுத்து செல்வதன் மூலம், வருவாயை அதிகரிப்பது தொடர்பாக, ஊழியர் மற்றும் அதிகாரிகளின் சங்கங்களை அழைத்து பேசுவதில் கூட அக்கறை செலுத்தாத நிர்வாகத்தின் மீதான தனது கடுமையான கோபத்தை நமது பொதுச்செயலர் தெரிவித்தார். விவாதத்தின் இறுதியில், அடுத்த வாரத்தில் ஊதியம் பட்டுவாடா செய்வதற்கான முயற்சியை மேற்கொள்வதாக DIRECTOR(Finance) தெரிவித்தார்.