கரோனாவின் பிறப்பிடமான சீனாவின் வூஹானில் பொதுப் போக்குவரத்து இயங்குகிறது. உலகிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட அமெரிக்காவிலும், இந்தியாவிலேயே மோசமாகப் பாதிக்கப்பட்ட மஹாராஷ்டிரத்திலும்கூடப் பொதுப்போக்குவரத்து இயக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் பொதுப்போக்குவரத்தை முடக்கி வைத்திருப்பதன் மூலம், மக்களைப் பார்த்து நாமும் அரசும் திரும்பத் திரும்பச் சொல்லிக்கொண்டிருப்பது ஒன்றே ஒன்றுதான், “சொந்த வாகனம் இல்லாதவர்கள் வாழத் தகுதியில்லாதவர்கள்!”

தமிழ்நாட்டில் மார்ச் 22 அன்று நிறுத்தப்பட்ட பொதுப்போக்குவரத்து, ஐந்து மாதங்களாகியும் இன்னும் தொடங்கப்படவில்லை. இடையில் ஜூன் 1 முதல் மாவட்டம், மண்டலத்துக்குள் பேருந்து இயக்கப்படும் என்று அறிவித்த தமிழக அரசு, ஓரிரு வாரங்களிலேயே அதையும் முடக்கிவிட்டது. பொதுப்போக்குவரத்து முடக்கத்தால் வேலையையும் வருமானத்தையும் இழந்து, வறுமையில் வாடிக்கொண்டிருப்போரின் எண்ணிக்கை ஒரு கோடியைத் தாண்டும்

நசுக்கப்படும் ஏழைகளின் குரல்

இ-பாஸ் பிரச்சினை நடுத்தர வர்க்கத்தின் பிரச்சினை என்பதால், ஓரளவுக்கு அது ஊடகங்களிலும், அரசியல் அரங்கிலும் எதிரொலித்தது. ஆனால், “பஸ் எப்ப விடுவாங்க அய்யா?” என்று கேட்கும் ஏழைகளின் குரலை, “அறிவிருக்குதா? பஸ் விட்டா கரோனா பரவிடாதா?!” என்று நசுக்கிக்கொண்டிருக்கிறோம் நாம். தமிழ்நாட்டில் ஓடிக்கொண்டிருந்த 22 ஆயிரம் பேருந்துகளில், தினமும் விற்பனையாகும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கை 2.10 கோடி. அதில் முக்கால்வாசி டிக்கெட்டுகள், நகர்ப் பேருந்துகளில் கிழிக்கப்படுபவை. தங்கள் வருமானத்துக்கும், வாழ்க்கைத் தரத்துக்கும் பொதுப்போக்குவரத்தே சிக்கனமானது, பாதுகாப்பானது என்பது பொதுமக்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. பொதுப்போக்குவரத்து கைவிட்டதால், அதில் பாதிப் பேர் வீட்டில் முடங்கிக் கிடக்கிறார்கள்.

கட்டுமானப் பணி, சிறு மில்கள், தீப்பெட்டி, பஞ்சாலைகள் போன்றவற்றில் அன்றாடக் கூலி வேலைக்குச் செல்வோரை முற்றாக முடக்கியிருக்கிறது பொதுப்போக்குவரத்து முடக்கம். குறிப்பாக, பெண்களின் வேலைவாய்ப்பை அடியோடு ஒழித்துக் கட்டியிருக்கிறது. பெண்கள் காலையில் வீட்டு வேலைகளை முடித்துவிட்டு, பேருந்தில், மின்சார ரயிலில் வேலைக்குப் போய் வந்தவர்கள். இப்போது வேலையும் இல்லை, வருமானமும் இல்லை. ஜெராக்ஸ், ஸ்டேஷனரி போன்ற சிறு கடை நடத்துவோர், பணியாளர்களுக்கு மாதாந்திர பாஸ் எடுத்துக் கொடுத்திருந்தார்கள். ஒரு மாதத்துக்கே ரூ.350 முதல் அதிகபட்சம் ரூ.1,000-தான் ஆகும். இப்போது, ஒவ்வொரு பணியாளருக்கும் போக்குவரத்துச் செலவே ஆயிரக்கணக்கில் ஆகிறது. அது கட்டுப்படியாகாததால் பல கடைகள் பூட்டிக் கிடக்கின்றன. அலுவலகங்களுக்கு இரு சக்கர வாகனங்கள், கார்களில் செல்வோரின் எண்ணிக்கை உயர்ந்துகொண்டே இருக்கிறது. ஊதியம் குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், போக்குவரத்துச் செலவோ நான்கு மடங்கு அதிகரித்திருக்கிறது. இந்தக் கொடுமையை எங்கே போய் முறையிடுவது?

பேருந்தாக மாறிய ஆட்டோக்கள்

திருமணம் உள்ளிட்ட விசேஷங்கள் சுருங்கிவிட்டன. கோயில்களில் விழாக்களோ வழிபாடுகளோ இல்லை. எனவே, இப்போது புறநகர்ப் பேருந்துகளின் தேவை குறைந்துவிட்டது. ஆனால், நகர்ப் பேருந்துகளின் தேவை கொஞ்சம்கூடக் குறையவில்லை. பேருந்து இல்லாததால் நிறையப் பேர் ஷேர் ஆட்டோக்களில் பயணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். ஒவ்வொரு ஆட்டோவும் தன்னை ஒரு பேருந்தாகப் பாவிக்கத் தொடங்கியிருக்கிறது. முக்குக்கு முக்கு போக்குவரத்துக் காவலர்கள் நிற்கும் மதுரை போன்ற பெருநகரங்களிலேயே டீசல் ஆட்டோக்கள் 10, 12 பேரை ஏற்றிக்கொண்டு பறக்கின்றன. கரோனா அபாயம், விபத்து பயத்தைவிட வாழ்ந்தாக வேண்டுமே எனும் உந்துதலே அவர்களை இப்படியெல்லாம் பயணிக்க வைக்கிறது. உசிலம்பட்டி, மேலூர், வாடிப்பட்டி மாதிரியான ஊர்களின் நிலையைக் கேட்கவும் வேண்டுமா? மினி பஸ்களின் தேவையை வேறு யாரால் பூர்த்திசெய்ய முடியும்? சிற்றூர்களிலிருந்து எப்படியாவது அருகில் உள்ள ஊர்களுக்கு வந்து அங்கிருந்து நகரங்களுக்குப் போனால்தான் பிழைப்பு என்கிற நிலையில்தான் நம் கிராமத்து உழைப்பாளிகளின் நிலை இருக்கிறது.

கிராமத்துப் பெரியவர்கள் காலை 8 மணிக்கு ஒரு டவுன் பஸ்ஸில் ஏறி, அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்குப் போய், ஊசி போட்டுக்கொண்டு மாத்திரையும் வாங்கி வந்துவிடுவது வழக்கம். ஆரம்ப சுகாதார நிலையமெல்லாம் நமக்குச் சரிவராது, டவுன் தர்ம ஆஸ்பத்திரியில்தான் நன்றாகப் பார்ப்பார்கள் என்கிற கூட்டத்துக்கும், அரசுப் பேருந்துகள்தான் உதவும். ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதும் ரத்த அழுத்தம், சர்க்கரை போன்ற தொடர் சிகிச்சைக்கான மாத்திரைகளை முதலில் ஊர் தேடிவந்து கொடுத்தார்கள். இப்போது மாத்திரையும் வரவில்லை, பேருந்தும் ஓடவில்லை. பாவம் பாட்டி, தாத்தாக்கள்.

இந்நிலை இப்படியே தொடர்ந்தால், மீண்டும் போக்குவரத்து தொடங்கப்படும் காலத்தில் நம்முடைய பழைய பேருந்துகளில் எத்தனை பேருந்துகள் நகரும் என்ற சந்தேகம் போக்குவரத்து ஊழியர்களுக்கே இருக்கிறது. இன்னொருபுறம், அரசுப் போக்குவரத்துக் கழகங்களின் நஷ்டம் கைமீறிப் போய், ஒட்டுமொத்தமாகத் தனியாருக்குத் தாரை வார்க்கப்படக்கூடிய சூழலும் வரலாம். மக்களின் வாழ்க்கை முறை மாறி, பொதுப்போக்குவரத்தைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை குறைந்தால், அதன் விளைவாக எத்தனை பேர் வேலையிழக்க நேரிடும் என்கிற கவலையும் இருக்கிறது.

பொதுப்போக்குவரத்து தொடங்கட்டும்

அரசுப் போக்குவரத்து ஊழியர் சம்மேளன (சிஐடியு) மாநில பொதுச் செயலாளர் ஆறுமுக நயினாரிடம் பேசியபோது அவர் சொன்னார், “ஏற்கெனவே போக்குவரத்துக் கழகம் கடும் நிதிச் சிக்கலில் இருக்கிறது. ரூ.7,304 கோடி நஷ்டத்தில் இருப்பதாக அரசே சொல்லியிருக்கிறது. போக்குவரத்து முடக்கப்பட்டுள்ளதால், கடன் வாங்கித்தான் 1.25 லட்சம் ஊழியர்களுக்கும் ஊதியம் கொடுத்திருக்கிறார்கள். ஊரடங்குக் காலத்தில் மட்டும் ரூ.1,500 கோடிக்கு மேல் கடன் அதிகரித்திருக்கிறது. எந்த நிறுவனமாக இருந்தாலும் இயங்கிக்கொண்டே இருந்தால், கடன் பிரச்சினைகளைச் சமாளிப்பது எளிது. ஆனால், வாகனங்களை நிறுத்திவைத்தால், பணச்சுழற்சிக்கு வழியில்லாமல் போய்விடும்.

அரசுப் பேருந்துகளுக்குத் தினமும் 18 லட்சம் லிட்டர் டீசல் செலவாகும். அதை இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடம், 45 நாள் தவணையில் வாங்கிவந்தோம். இவ்வளவு நாட்களாகப் பேருந்துகளை இயக்காததால், போக்குவரத்தைத் தொடங்குகிற நாளன்று உடனடியாக 45 நாட்களுக்கான பணத்தை மொத்தமாகச் செலுத்த வேண்டியதிருக்கும். அதற்கு மட்டுமே ரூ.700 கோடி தேவைப்படலாம். ஊழியர்களுக்கு இதுவரையில் கொடுக்கப்பட்ட சம்பளம்கூட, பிடித்தம் போக உள்ள சம்பளம்தான். பிஎஃப், இஎஸ்ஐ உள்ளிட்டவற்றுக்கெல்லாம் பணம் செலுத்தினார்களா என்று தெரியவில்லை. இதெல்லாம் பிரச்சினையாக வெடிக்கலாம். இப்படி பேருந்துகளை இயக்காத ஒவ்வொரு நாளும் கடனும் பிரச்சினைகளும் அதிகரித்துக்கொண்டே இருப்பது அதிகாரிகளுக்கும் அரசுக்கும் தெரியும். ஆனால், அரசு வேண்டுமென்றேதான் பொதுப்போக்குவரத்தை இயக்காமல் இருக்கிறதோ என்ற சந்தேகம் எங்களுக்கு இருக்கிறது!”

கரோனா காலத்தில் ரயில்களைத் தனியாருக்குத் தாரை வார்த்துக்கொண்டிருக்கிறது ஒன்றிய அரசு. அரசுப் போக்குவரத்துக் கழகத்தை என்ன செய்யக் காத்திருக்கிறது தமிழ்நாடு அரசு என்ற கேள்வி எழுவதைத் தவிர்க்க முடியவில்லை!