மத்திய தொழிலாளர் நல ஆணையர் தலைமையில், காணொளி காட்சி மூலமாக இன்று (02.09.2020) பேச்சு வார்த்தை நடைபெற்றது. 2019, பிப்ரவரி 18முதல் 20 வரை நடைபெற்ற மூன்று நாட்கள் வேலை நிறுத்தத்தின் கோரிக்கை சாசனத்தில் உள்ள பிரச்சனைகள் தொடர்பாக விவாதிக்க, இந்தக் கூட்டம் நடைபெற்றது. AUAB சார்பாக தோழர் P.அபிமன்யு, GS, BSNLEU & AUAB அமைப்பாளர், தோழர் S.சிவகுமார், GS, AIBSNLEA, தோழர் சுரேஷ் குமார், GS, BSNL MS, தோழர் அனில்குமார், GS, BSNL ATM மற்றும் தோழர் H.P.சிங், GS, BSNL OA ஆகியோர் பங்கு பெற்றனர். நிர்வாகத்தின் சார்பில் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

3வது ஊதிய மாற்றம், 4G சேவைகளை BSNL உடனே துவங்க வேண்டும், ஓய்வூதிய மாற்றம், மற்றும் அரசு உத்தரவின் படி ஓய்வூதிய பங்கீடு வழங்குவது உள்ளிட்ட முக்கியமான கோரிக்கைகளை முன் வைத்து நடைபெற்ற இந்த வேலை நிறுத்தம் தொடர்பாக AUAB அமைப்பாளர் தோழர் P.அபிமன்யு கீழ்கண்ட விஷயங்களை மத்திய தொழிலாளர் நல ஆணையரிடம் தெரிவித்தார்.

(1) ஊதிய மாற்றம் தொடர்பாக தொலை தொடர்பு துறையின் வழிகாட்டுதலின் அடிப்படையில், BSNL நிர்வாகம், இணைந்த ஊதிய பேச்சு வார்த்தைக் குழு ஒன்றை அமைத்தது. அதன் ஒரு சில கூட்டங்களும் நடைபெற்றன. அதற்கு பின்னர் நிர்வாகம் ஒரு தலைபட்சமாக அதன் கூட்டங்களை நடத்தாமல் நிறுத்திக் கொண்டது.

(2) BSNLக்கு 4G அலைக்கற்றை ஒதுக்கப்பட்டு விட்டது என அரசாங்கம் அறிவித்த பின்னரும், இன்னமும் 4G சேவை தர BSNLக்கு அனுமதி வழங்கப்படவில்லை. சமீபத்தில் கூட, 4G கருவிகள் வாங்க, BSNL விடுத்திருந்த டெண்டரை மத்திய அரசு ரத்து செய்து விட்டது.

(3) BSNL ஓய்வூதியர்களின் ஓய்வூதிய மாற்றம் தொடர்பாக, பணியில் இருக்கும் ஊழியர்களின் ஊதிய மாற்றத்திலிருந்து, ஓவ்யூதிய மாற்றம் பிரிக்கப்படும் என அப்போதைய தொலை தொடர்பு துறை இணையமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்கள் உறுதி அளித்திருந்தார். ஆனால் அதன் பின் தொலை தொடர்பு துறை இந்த உறுதி மொழியிலிருந்து பின்வாங்கி விட்டது.

(4) BSNLஇடம் இருந்து ஓய்வூதிய பங்கீடு பெறுவதில் அரசின் விதிகள் அமலாக்கப்படும் என அப்போதைய தொலை தொடர்பு இணையமைச்சர் திரு மனோஜ் சின்ஹா அவர்கள் உறுதி அளித்திருந்தார். ஆனால் தொலைதொடர்புதுறை, இந்த உறுதி மொழியையும் காற்றில் பறக்க விட்டு விட்டது.

மேலும் விரைவில் மற்றொரு பேச்சு வார்த்தைக்கு மத்திய தொழிலாளர் நலத்துறை ஆணையர் அழைப்பு விடுக்க வேண்டும் என்றும், அதில் முடிவு எடுக்கும் அதிகாரமுள்ள, BSNL மற்றும் DoT அதிகாரிகளை பங்கேற்க செய்ய வேண்டும் என்றும் AUAB அமைப்பாளர் கேட்டுக் கொண்டார். இதனை கேட்ட பின்னர், அடுத்த கூட்டம் 24.09.2020 காலை 10.30 மணிக்கு நடைபெறும் என மத்திய தொழிலாளர் நல ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.