இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புக்கான சூழல் கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மோசமாக உள்ளதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்துள்ளது.

மேன்பவர் குரூப் என்ற நிறுவனம் நடத்திய சர்வேயில் இந்திய நிறுவனங்கள் இந்த ஆண்டில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் சூழலில் இல்லை எனத் தெரிய வந்துள்ளது. 813 நிறுவனங்கள் இந்த சர்வேயில் கலந்து கொண்டுள்ளன. இவற்றில் 3 சதவீத நிறுவனங்கள் மட்டுமே அடுத்த 3 மாதங்களில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்க திட்டம் வைத்திருப்பதாகக் கூறியுள்ளன. பெரும்பாலான நிறுவனங்கள் இந்த நிதி ஆண்டில் புதிதாக வேலைக்கு ஆட்களை எடுக்கும் சூழலில் இல்லையென கூறியுள்ளன.

மேலும் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்களை காட்டிலும் சிறிய நிறுவனங்களில் வேலைவாய்ப்பு சூழல் வலுவாக இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. மேன்பவர் குரூப் நிர்வாக இயக்குநர் சந்தீப் குலாதி இந்த சர்வே குறித்து கூறியதாவது:

கரோனா பாதிப்புக்குப் பின் எடுக்கப்பட்ட ஆட்குறைப்பு நடவடிக்கை நிறுவனங்களுக்கு வேலைவாய்ப்பு சூழல் குறித்து தெளிவை கொடுத்துள்ளது. சந்தையின் தேவைக்கு ஏற்ப மனிதவளத்தை திட்டமிடுகின்றன. மேலும் உற்பத்தியை அதிகப்படுத்தும் உத்திகள், மனிதவளத்தைப் பயன்படுத்துவதில் புதிய முயற்சிகள், தொழில்நுட்பத்தை மேம்படுத்துதல் போன்ற வகைகளில் நிறுவன செயல்பாடுகளைத் திட்டமிடுகின்றன.

அரசும் நிறுவனங்கள் சுமையைக் குறைக்க உற்பத்தி ஊக்குவிப்பு சார்ந்த திட்டங்களை முன்னெடுக்கிறது. தொழிலாளர் சட்டத்தில் சீர்திருத்தம், வரி நடைமுறையில் தளர்வுகள் போன்றவற்றையும் திட்டமிட்டு வருகிறது

இவ்வாறு சந்தீப் குலாதி கூறினார்.

முக்கியமாக சர்வேயில் 44 சதவீத நிறுவனங்கள் அடுத்த 9 மாதங்களில் கரோனாவுக்கு முந்தைய மனிதவள எண்ணிக்கையைக் கொண்டுவர வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளன. அதேசமயம் 42 சதவீத நிறுவனங்கள் எதிர்கால சூழல் குறித்து நம்பிக்கையற்று உள்ளதாகக் கூறியுள்ளன.