தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஒ) தொழிலாளர்களுக்கு ஊழியர்களுக்கு வழங்கப்படும் 8.5% வட்டி விகிதத்தை இரண்டு தவணையாக செலுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் வருவாய் பாதிக்கப்பட்டதால் இந்த முடிவை அரசு எடுத்துள்ளது என்று கூறப்படுகிறது. 2019-20 ஆம் ஆண்டிற்கான வட்டி விகிதத்தில் 8.15 சதவீதத்தை இப்போது வழங்கி உள்ளது.:ஆனால் மீதமுள்ள 0.35 சதவிகிதம் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் பங்கு முதலீடுகளை மீட்டெடுத்த பிறகு டிசம்பரில் வரவு வைக்கப்படும்” என்று தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு மத்திய அறங்காவலர் குழுவின் (சிபிடி) உறுப்பினர் தெரிவித்தார். தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு தனது சந்தாதாரர்களுக்கு 8.5 சதவீத வட்டி விகிதத்தை ஒரே நேரத்தில் வழங்கினால், 2019-20 ஆம் ஆண்டில் ரூ .2,500 கோடி பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்றும் அந்த அதிகாரி கூறினார். தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வார் தலைமையில் புதன்கிழமை நடந்த EPFO ​​இன் மத்திய அறங்காவலர் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது

ஏழு ஆண்டில் இல்லாத சரிவு

8.5 சதவீத வட்டி விகிதம் என்பது ஏற்கனவே ஏழு ஆண்டுகளில் இல்லாத அளவாக குறைக்கப்பட்ட வட்டி விகிதம் ஆகும், ஏனெனில் முந்தைய நிதியாண்டில் ஈபிஎஃப்ஓ அமைப்பு அதன் சந்தாதாரர்களுக்கு 8.65 சதவீத வட்டி கொடுத்து வந்தது.

மிக குறைவான வட்டி

இதனிடையே இந்த ஆண்டு டிசம்பரில் மீதமுள்ள 0.35% வட்டி விகிதத்தை EPFO ​​ஆல் வரவு வைக்க முடியாவிட்டால், இதுவே 1977-78 தொடங்கப்பட்ட இந்த அமைப்பு வழங்கும் மிக குறைந்த வட்டி வருவாய் ஆகும். முன்னதாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு 1977-78 ஆம் ஆண்டில் 8 சதவீத வட்டி விகிதத்தை தொழிலாளர்களுக்கு வழங்கியிருந்தது.

எதிர்மறையான வருவாய்

பங்குச் சந்தைகளில் EPFO இன் முதலீடுகள் 2019-20 ஆம் ஆண்டில் எதிர்மறையான வருவாயைக் கொடுத்திருப்பதை EPFO ​​இன் மத்திய அறங்காவலர் கூட்டத்தில் வழங்கப்பட்ட அதிகாரப்பூர்வ தகவல்கள் காட்டின. முதலீடுகள் கடந்த நிதியாண்டில் -8.3 சதவீத வருவாயைப் பெற்றன, முந்தைய நிதியாண்டில் 14.7 சதவீதமாக இருந்தது.

நிதியமைச்சகம் முடிவு செய்யும்

2018-19 ஆம் நிதியாண்டில் ரூ .27,974 கோடி முதலீடு செய்யப்பட்ட நிலையில், 2019-20 ஆம் ஆண்டில் ரூ .31,501 கோடி பங்குசந்தை மற்றும் அரசு பத்திரங்களில் முதலீடு செய்தது. ஆனால் அதன் முதலீடுகளுக்கு குறைந்த வருவாயே கிடைத்தது. எனவே இந்த நிதியாண்டிற்கான வட்டி விகிதம் நிதி அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பின்னர் தொழிலாளர் அமைச்சகத்தால் அறிவிக்கப்படும்.

தோழர்களே!

 மேலே சொல்லப்பட்ட செய்தியை நாம்  பரிசீத்தால் ,அரசின் அடுத்த இலக்கு  EPF மற்றும் அது தொடர்பான நாம் பெற்று வரும் பயன்களை பறிப்பதற்கான நடவடிக்கையை அரசு துவங்கியுள்ளதாக தெரிகிறது.

EPF பணத்தை பங்கு சந்தையில் முதலீடு செய்வதை நமது சங்கம் துவக்கத்திலிருந்து எதிர்த்து வருகிறது.