இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம்   (எல்ஐசி) கடந்த 4 ஆண்டுகளில்  ரூ .33000 கோடிகளை நெடுஞ்சாலைத்  திட்டங்களுக்காகதந்துள்ளது என நாடாளுமன்றத்தில் நிதி இணையமைச்சர் அனுராக் தாகூர் பதில்  அளித்துள்ளார்.

“பாரத்மாலா”
மத்திய அரசு அறிவித்த பாரத் மாலா பரியோஜனா திட்டத்திற்கான நிதியாதாரத் திரட்டலில் எல்.ஐ.சி மிகப்பெரும் பங்கினைத் தருகிற நிறுவனமாக இருக்கிறது. இதுகுறித்த கேள்வி ஒன்றை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எம்.பி.,  நாடாளுமன்றத்தின் முதல் நாள் அமர்வில் எழுப்பியிருந்தார். அதற்கு பதில் அளித்த நிதி இணையமைச்சர் அனுராக் தாகூர், “தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) தகவலின்படி 2016-17, 2017-18, 2018-19 ஆண்டுகளில் ரூ. 25,000 கோடிகளை 30 ஆண்டுகளுக்கும், 2019-20ல் ரூ.7,904 கோடிகளையும் எல்.ஐ.சி நெடுஞ்சாலைத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளது” என்று தெரிவித்துள்ளார். இம்முதலீடுகள் பாரத் மாலா மற்றும் பல நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கானவை என்றும் அப்பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்.ஐ.சியின் பலம்
இது குறித்து சு.வெங்கடேசன் எம்.பி., தெரிவிக்கையில், இந்தியாவின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எல்.ஐ.சி அளித்து வரும் அளப்பரிய பங்களிப்பிற்கு இது சாட்சியம்.மேலும், 30 ஆண்டுகளுக்கான நீண்டகால முதலீடுகளுக்கு உள் நாட்டு சேமிப்பு
களைத் திரட்டித் தருகிற சீரிய பணியை ஆற்றி வரும் எல்.ஐ.சி., அரசின் இயல்பான ஏகபோகமாக, முழுமையான அரசு நிறுவனமாகத் திகழ வேண்டிய முக்கியத்துவத்தையும் இது உணர்த்துகிறது. ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு அந்நிய முதலீடுகள், தனியார் முதலீடுகளே வழி வகுக்குமென்ற அரசின் நவீன தாராளமயப் பாதைக்கு எதிர் மாறான அனுபவத்தை எல்.ஐ.சி தந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

பங்கு விற்பனையை கைவிடுக!

இந்திய நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள சூழலில் அரசின் பொது முதலீடுகள் அதிகரிக்க வேண்டிய அவசியமும் அதன் மூலம் வேலை உருவாக்கம் நிகழ வேண்டிய தேவையும் உள்ள நேரத்தில் அதற்கான பெரும் பங்களிப்பை வழங்கி வரும் எல்.ஐ.சி முழுக்க முழுக்க அரசின் கைகளிலேயே நீடிக்க வேண்டும்; பங்கு விற்பனை முயற்சிகளை கைவிட வேண்டும்.  இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி., வலியுறுத்தியுள்ளார்.