நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் தேசவிரோத, தொழிலாளர் விரோத, விவசாய விரோத நடவடிக்கைகளை எதிர்த்து இந்திய தொழிலாளர் வர்க்கம் நவம்பர் 26 அன்று பிரம்மாண்டமான அகில இந்திய பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளது.

தொழிலாளர்களுக்கு விரோதமான தொழிலாளர் சட்டத்தொகுப்புகள் அனைத்தையும் திரும்பப்பெற வேண்டும்; விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை திரும்பப்பெற வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்கள் ரயில்வே மற்றும் பாதுகாப்பு துறை நிறுவனங்களை தனியார்மய மாக்கக்கூடாது; வேலை, கூலி, சமூகப்பாதுகாப்பு மற்றும் ஓய்வூதியம் ஆகியவற்றை உத்தரவாதப்படுத்த வேண்டும்; உணவு, சுகாதாரம், கல்வி மற்றும் வருமானத்தை அனைவருக்கும் உத்தரவாதப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து நவம்பர் 26 அன்றுநாடு தழுவிய பொது வேலைநிறுத்தத் திற்கு மத்திய தொழிற்சங்கங்கள் கூட்டாகஅழைப்பு விடுத்துள்ளன.

ஐஎன்டியுசி, ஏஐடியுசி, எச்எம்எஸ், சிஐடியு, ஏஐடியுசிசி, டியுசிசி, சேவா, ஏஐசிசிடியு, தொமுச, யுடியுசி ஆகிய 10 மத்திய தொழிற்சங்கங்களும் அனைத்து பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர் சம்மேளனங்கள் மற்றும்  வங்கிபிஎஸ்என்எல், இன்சூரன்ஸ்,  பாதுகாப்புதளவாட நிறுவனங்கள், ரயில்வே மத்திய-மாநில அரசு ஊழியர்கள் உள்பட அனைத்துத் துறை ஊழியர் மத்திய சம்மேளனங்களும் இணைந்து அக்டோபர் 2 அன்று இணைய வழியாக  இந்தியதொழிலாளர்களின் தேசிய மாநாட்டினை நடத்தின.
மாலை 3 மணியளவில் துவங்கியஇந்த மாநாட்டிற்கு ஐஎன்டியுசி தலைவர் சஞ்சீவ ரெட்டி தலைமையேற்றார். சிஐடியு பொதுச் செயலாளர் தபன்சென், ஏஐடியுசி சார்பில் தாஸ்குப்தா, தேவராஜன், தொமுச தலைவர் சண்முகம், சேவா தலைவர் சோனியா ஜார்ஜ், ஏஐசிசிடியு தலைவர் ராஜீவ் திம்ரி,உள்ளிட்ட தலைவர்கள் உரையாற்றினர். சிஐடியு தலைவர் டாக்டர் கே.ஹேமலதா, அகில இந்திய துணைத் தலைவர் ஏ.கே.பத்மநாபன் உள்ளிட்ட தலைவர்கள் இணையவழியாக கலந்து கொண்டனர்.

இம்மாநாடு நாடு முழுவதும் பல்வேறுதுறைகளில் மத்திய அரசு மேற்கொண்டிருக்கும் நாசகர கொள்கைகளை எதிர்த்து போராட்டக்களம் கண்டிருக்கும்தொழிலாளர்களுக்கு வாழ்த்துக்களை யும் பாராட்டுக்களையும் தெரிவித்துள் ளது. குறிப்பாக வேளாண் சட்டங்களை எதிர்த்து ஆவேசத்துடன் போராடிய விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு வாழ்த்து தெரிவித்தது. தற்போது பெரும் ஆவேசத்துடன் நடைபெற்று வரும் இந்திய சுரங்கத் தொழிலாளர்களின் போராட்டத்திற்கும் பாராட்டு தெரிவித்தது. சுரங்கத் தொழிலை தனியாருக்குதாரை வார்க்கும் அரசின் முயற்சிகளுக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வோம் என்று மாநாடு சூளுரைத்தது.

அதேபோல, பாதுகாப்பு தளவாடங்களை உற்பத்தி செய்யும் வெடிமருந்து தொழிற்சாலைகளை தனியாருக்கு தாரைவார்க்கும் மத்திய அரசின் நடவடிக்கைகளை எதிர்த்து அக்டோபர் 12 முதல் இந்திய பாதுகாப்புத்துறை ஊழியர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர். இப்போராட் டம் வெற்றிபெற மாநாடு வாழ்த்தும் ஆதரவும் தெரிவித்தது. இவை உட்பட பல்வேறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, மோடி அரசின் தொழிலாளர் விரோத, விவசாய விரோத சட்டங்களையும் கொள்கைகளையும் எதிர்த்து நாடுதழுவிய வேலைநிறுத்தப் போராட்டத்தை நடத்துவது என தீர்மானித்தது. 2020 நவம்பர் 26 அன்று நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம் நடைபெறும் என்றும் இப்போராட்டத்திற்கு ஒட்டுமொத்த இந்திய தொழிலாளர் வர்க்கமும் விவசாயவர்க்கமும் அனைத்து நடுத்தர வர்க்க ஊழியர் இயக்கங்களும் பேராதரவு தர வேண்டும் என்று இம்மாநாடு அழைப்பு விடுத்தது.