கொரோனா, காற்று மாசுபாடு காரணமாக இந்த வருடம் டெல்லி உட்பட 6 மாநிலங்களில் பட்டாசு வெடிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவில் பட்டாசு தலைநகரமான சிவகாசி இருளில் மூழ்கியுள்ளது. 2020ஆம் ஆண்டு ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் இந்திய மக்கள் இந்த தீபாவளி பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடத் திட்டமிட்டு வரும் நிலையில் அடுத்தடுத்த மாநிலங்கள் பட்டாசு வெடிக்கத் தடை விதித்து வருகிறது. தீபாவளி பண்டிகையின் போது இந்தியாவில் சுமார் 80 சதவீத பட்டாசு தயாரிப்பு மற்றும் விநியோகம் சிவகாசியில் இருந்து செல்லும் நிலையில், 6 மாநிலங்களின் தடையால் இத்துறை மொத்தமாக முடங்கியுள்ளது.

வர்த்தக பாதிப்பு :

சிவகாசியில் இருக்கும் தொழிற்சாலைகள் தீபாவளி பண்டிகைக்காகப் பல நூறு கோடி ரூபாய் மதிப்பிலான பட்டாசுகளை வருடம் முழுவதும் தயாரித்து நாடு முழுவதும் விநியோகம் செய்து விற்பனைக்காகத் தயாராக உள்ள நிலையில், 6 மாநிலங்கள் அடுத்தடுத்து தடை உத்தரவை வெளியிட்டுள்ளதால் பல ஆயிரம் வியாபாரிகள் தற்போது பொருட்களைத் திரும்பப் பெற்றுக்கொண்டு பணத்தைக் கேட்டும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் சிவகாசியில் இருக்கும் பட்டாசு தொழிற்சாலைகள் செய்வது அறியாமல் சோகத்தில் மூழ்கியுள்ளது.

ஊழியர்கள் :

பட்டாசு வெடிக்கத் தடை ஏற்பட்டுள்ள காரணத்தால் வருடம் முழுவதும் பணியாற்றிய சிவகாசி பட்டாசு தொழிற்சாலையின் பல லட்சம் ஊழியர்கள் நிலை தற்போது கேள்விக்குறியாகியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் பல தொழிற்சாலைகள் இதனால் மூடப்படும் அபாயமும் ஏற்படும் எனக் கூறப்படுகிறது

100 வருட தொழிற்துறை :

ஒவ்வொரு வருடம் பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வரும் பட்டாசு தொழிற்சாலைகள், இந்த வருடம் கொரோனா மற்றும் லாக்டவுன் பாதிப்புகள் பின் பெரிய அளவிலான பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. வர்த்தக ரீதியாகவும், வருமான ரீதியாகவும் 100 வருடப் பழமையான சிவகாசி பட்டாசு தொழிற்சாலை வாழ்வா சாவா போராட்டத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது

6 மாநிலங்கள்:

டெல்லி, ராஜஸ்தான், மேற்கு வங்காளம், மகாராஷ்டிரா, ஒடிஷா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்கள் காற்று மாசுபாடு காரணமாகப் பட்டாசு வெடிக்கத் தடை விதித்துள்ளது. முதல் முறையாகப் பல மாநிலங்கள் ஒன்று சேர்ந்து தடை விதிக்கும் காரணத்தினாலும், இந்த வருடம் ஏற்பட்டுள்ள வர்த்தக பாதிப்பாலும், சிவகாசியில் இகுக்கும் பல பட்டாசு தொழிற்சாலை மூட திட்டமிட்டு வருகிறது.

முதல் உலகப் போர் :

முதல் உலகப் போரின் முடிவில் வறுமை காரணமாகச் சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலை துவங்கப்பட்டது. அன்று முதல் இன்று வரையில் பட்டாசு தயாரிப்பில் பல தடைகளைத் தாண்டி பெரிய அளவிலான வளர்ச்சி அடைந்து இந்த மாநிலத்தின் பொருளாதாரத்தையே மாற்றியுள்ளது இந்த 100 வருட பழமையான தொழிற்துறை.

10 மாத உழைப்பு :

சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் ஒரு பருவகால வர்த்தகம். 10 மாதம் கடுமையான உழைப்பில் உருவாகும் பட்டாசுகள் வெறும் 1 மாதத்தில் விற்பனை செய்யப்படும் வகையிலான ஒரு துறை. மாநிலங்களில் தொடர் கட்டுப்பாடுகள் மற்றும் வரி விதிப்பின் காரணமாக இத்துறையே முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக ஒவ்வொரு வருடமும் சீன பட்டாசுகள் இறக்குமதி காரணமாகச் சிவகாசி பட்டாசு விற்பனை பெரிய அளவில் பாதிக்கப்படும். ஆனால் இந்த வருடம் இந்தியச் சீன பிரச்சனையால் பட்டாசு இறக்குமதி தடை பெற்றுள்ளது. இதனால் அதிகளவிலான வர்த்தகத்தைப் பெற முடியும் என நம்பிக்கையிலும் மகிழ்ச்சியிலும் சிவகாசி பட்டாசு தொழிற்சாலைகள் இருந்தது.

கொரோனா பாதிப்பு:

கொரோனா பாதிப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ், ஆடை நிறுவனங்கள் ஆயத்தமாகி வருவது போல் அதிகளவிலான விற்பனைக்குத் தயாராகி வந்தது. ஆனால் 6 மாநில தடைகள், அதுவும் தீபாவளி பண்டிகைக்கு 2 வாரம் மட்டுமே இருக்கும் நிலையில் போடப்பட்ட தடை இத்துறையைப் பெரிய அளவில் பாதித்துள்ளது