மோடி தலைமையிலான பாஜக அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச விரோத நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக இந்திய நாடு முழுவதும் தொழிலாளர்களும்,விவசாயிகளும் ஒருங்கிணைந்து நடத்துகிற நவம்பர் 26 பொது வேலை நிறுத்தப் போராட்டத்தையும்  நவம்பர் 26-27 தேதிகளில் நடைபெறும் விவசாயிகளின் சாலை மறியல் போராட்டத்தையும் மகத்தான முறையில் வெற்றிபெறச் செய்திடுவோம் என்று மத்திய தொழிற்சங்கங்கள்,  துறைவாரி சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டுமேடை, தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணி  அறைகூவல் விடுத்துள்ளன.

இதுதொடர்பாக மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை சார்பில் அதில் அங்கம் வகிக்கும் சிஐடியு, ஏஐடியுசி, தொமுச உட்பட அனைத்து மத்தியசங்கங்களின் பொதுச் செயலாளர்கள் கையொப்பமிட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டுமேடையின் சார்பில் நவம்பர் 16 அன்று நடைபெற்ற கூட்டம், நவம்பர் 26 அன்று நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தம் தொடர்பாக நாடு முழுவதும் நடைபெற்றுவரும் பிரச்சாரம், மக்கள் மத்தியிலும் தொழிலாளர்கள் மத்தியிலும் அபரிமிதமான ஆதரவைப்பெற்றிருப்பதைக் கண்டு திருப்தியை வெளிப்படுத்திக்கொள்கிறது. மோடியின் தலைமையிலான பாஜக அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, தேச விரோத நாசகரக் கொள்கைகளுக்கு எதிராக பொது வேலை நிறுத்தத்திற்கான தயாரிப்புப் பிரச்சாரம் நாடு முழுவதும் பெரிய அளவில்ஆர்வத்துடன் எடுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கின்றன. கூட்டு சிறப்பு மாநாடுகள், சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்கள், துண்டுப்பிரசுரங்கள் மற்றும் மத்தியத் தொழிற்சங்கங்கள் சுயேச்சையாகவும், தங்களின் இணைப்புச் சங்கங்கள் சார்பாகவும் மாநில, மாவட்ட, வட்ட, வட்டார அளவில் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரங்களும் அதேபோன்று துறைவாரி சங்கங்கள் வெளியிட்டுள்ள துண்டுப்பிரசுரங்களும் மக்கள் மத்தியில் விரிவான அளவிற்குச்சென்றிருக்கின்றன. வேலை நிறுத்தத்திற்கான நோட்டீஸ் கொடுக்கப்பட்டுவிட்டது. தொழிலாளர்கள் மட்டுமல்லாது, சமூகத்தின் அனைத்துப் பகுதி மக்களும், அதாவது, மாணவர்கள், இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் முதலானவர்களும் முன்வந்து நவம்பர் 26 – அகில இந்திய வேலை நிறுத்தத்திற்குத் தங்கள் மனப்பூர்வமான ஆதரவை தெரிவித்து, விரிவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.

விவசாயிகள் ஆதரவு
தொழிலாளர் விரோத நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்கள் மேற்கொள்ளவிருக்கும் வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு மனப்பூர்வமாக ஆதரவு அளிப்பதாக அகில இந்திய விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு சார்பாக, விவசாய சங்கங்களின் கூட்டுமேடை கூறியிருப்பதை, இக்கூட்டம் வரவேற்றது. மோடி அரசாங்கத்தால் கொண்டுவரப்பட்டுள்ள கொடுமையான வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராட்டப் பாதையில் ஏற்கனவே ஈடுபட்டிருக்கும் விவசாயிகள் இவ்வாறு ஆதரவு அளித்திருப்பது மகிழ்ச்சியையும் நெகிழ்ச்சியையும் அளித்துள்ளது.

மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டுமேடை ஆரம்பகாலத்திலிருந்தே விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு ஒருமைப்பாடும் ஆதரவும் தெரிவித்து வந்துள்ளது. இப்போதும் விவசாயிகள் நவம்பர் 26-27 தேதிகளில் மேற்கொள்ளவிருக்கும் சாலை மறியல் போராட்டத்திற்கும், தில்லியில் நடைபெறும் மாபெரும் பேரணிக்கும்தன் முழு ஆதரவையும் அளிப்பதாக மீண்டும் தெரிவித்துக்கொள்கிறது.  மத்தியத் தொழிற்சங்கங்களின் கோரிக்கை சாசனத்தில், கொடூரமான வேளாண் சட்டங்கள் கிழித்து எறியப்பட வேண்டும் என்றகோரிக்கையும் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்தக் கோரிக்கையின்மீதும் தொழிற்சங்கங்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கின்றன.
மத்திய தொழிற்சங்கங்கள், துறைவாரி சம்மேளனங்கள் மற்றும் சங்கங்களின் கூட்டுமேடை, நவம்பர்26-27 தேதிகளில் தொழிலாளர்களின் அகில இந்தியவேலை நிறுத்தம், விவசாயிகளின் சாலை மறியல்மற்றும் பேரணி தொடர்பாக நாடுதழுவிய அளவில்வீரஞ்செறிந்த நடவடிக்கைகளைக் காண இருக்கிறது என்றும், மத்திய அரசாங்கத்தின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத, விவசாயிகள் விரோத, தேச விரோத நாசகரக் கொள்கைகளுக்கு எதிரான இந்தவேலைநிறுத்தமும், சாலை மறியலும், ஆட்சியாளர்களுக்கு எதிரான எதிர்ப்பு மற்றும் ஒத்துழையாமையின் திசைவழியில்  எழுச்சியுடன் வளர்ந்துகொண்டிருக்கும் மக்கள் போராட்டத்தின் ஒரு தொடக்கம்மட்டுமே என்றும் மத்தியத் தொழிற்சங்கங்களின் கூட்டுமேடை பிரகடனம் செய்கிறது.  இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

                                                ***************************

தலித் இயக்கங்களுக்கு வேண்டுகோள்

புதுதில்லி:
தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் அகில இந்திய தலைவர் ஆர்.ராதாகிருஷ்ணன், பொதுச்செயலாளர் டாக்டர் ராம்சந்திரதோம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் பாஜக ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட காலம் முதல் நாடு மிகப்பெரிய கேடுகளை சந்தித்து வருகிறது. மிகவும் பிற்போக்கு கருத்தியல் அடிப்படையில் ஆட்சி நடத்தி வருகிற பாஜக அரசு, இதுவரை இந்த நாட்டில்கடைப்பிடிக்கப்பட்டு வந்த எல்லா சிறந்த விழுமியங்களையும் முற்றிலுமாகசீரழித்து வருகிறது. நிதித்துறையிலிருந்து நீதித்துறை வரை,  ஏன் நாடாளுமன்றம் சட்டமன்றங்கள் கூட  மதிப்பிழந்து கொண்டு வருகின்றன. பொதுத்துறைகளை தனியார்மயமாக்கல் மக்கள் நலனுக்கு மட்டுமின்றி சமூக நீதிக்கும் குந்தகம் விளைவிப்பதாகும். இட ஒதுக்கீட்டு கொள்கையில் அரசு காட்டுகிற எதிர் மனோபாவம், அலட்சியம், சிதைக்கிற நடவடிக்கைகள் ஆகியவற்றின் காரணமாக பிற்படுத்தப்பட்ட, தலித் மற்றும் பழங்குடி மக்கள் இதுவரை பெற்றுவந்த இட ஒதுக்கீட்டு உரிமை ஒழிக்கப்படுகிறது. தேசிய கல்விக் கொள்கையானது கல்வி உரிமையை பறிக்கிறது.

பாஜகவின் ஜனநாயக மீறல்களை எதிர்ப்பவர்கள் பொய்வழக்குகளில் சிறையில் அடைக்கப்படுகின்றனர். தொழிலாளர்கள், விவசாயிகளின் உரிமைகளை பறித்து அதனை மறைப்பதற்காக மதவெறி அரசியலை தீவிரமாக முன்னெடுக்கிற பாஜக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக தொழிலாளர்களும் விவசாயிகளும் நவம்பர் 26, 27 தேதிகளில்  நடத்துகிற மறியல் உள்ளிட்ட போராட்டங்களிலும், நவம்பர் 26 வேலை நிறுத்தத்திலும்  பங்கேற்று வெற்றிபெறச் செய்ய வேண்டும்.நாடு முழுவதும் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் அங்கமாக செயல்பட்டு வருகிற மாநில அமைப்புகள் தங்களோடு தொடர்புடைய தலித் அமைப்புகளையும் இப்போராட்டத்தில் பங்கேற்கச் செய்ய வேண்டும். போராட்டங்களால் ஈர்க்கப்பட்ட மக்களிடமும் கருத்துப் பிரச்சாரங்களை மேற்கொண்டு அவர்களையும் எதிர்ப்பியக்கங்களில் பங்கேற்கச் செய்திட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.