இந்தியாவில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாமல் பல ஆண்டுகளாக மத்திய அரசு தவித்து வரும் நிலையில், தற்போது மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஒரு ஆய்வில் கொரோனாவை கட்டுப்படுத்த அறிவிக்கப்பட்ட லாக்டவுனுக்கு முன்பாகவே இந்திய நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அளவு அதிகமாக இருப்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. வேலைவாய்ப்புக்காகவும், பிழைப்புக்காகவும் பல கோடி மக்கள் ஒவ்வொரு வருடமும் கிராமம், டவுன் பகுதியில் இருந்து நாட்டின் பல முக்கிய நகரங்களுக்கு வரும் நிலையில், நகரங்களில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய நகரங்களில் வேலைவாய்ப்பின்மை அளவீடு அக்டோபர் – டிசம்பர் 2019ல் 7.9 சதவீதமாக இருந்த நிலையில், கொரோனாவுக்கான லாக்டவுன் அறிவிக்கப்பட்ட முந்தைய காலகட்டத்தில் ஜனவரி – மார்ச் காலகட்டத்தில் இதன் அளவு 9.1 சதவீதமாக இருந்தது என மத்திய புள்ளியியல் துறை வெளியிட்டுள்ள ஆய்வில் தெரிவித்துள்ளது. இது ஜூலை – செப்டம்பர் 2019ல் 8.4 சதவீதமாகவும், ஏப்ரல் – ஜூன் 2019 காலகட்டத்தில் 8.9 சதவீதமாகவும் இருந்ததுள்ளது. நகரங்களில் 15 முதல் 29 வயதுடைய மக்கள் தொகையில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்போரின் அளவு ஜனவரி – மார்ச் மாத காலகட்டத்தில் 21.1 சதவீதமாக உள்ளது. இது அக்டோபர் -டிசம்பர் காலகட்டத்தில் 19.2 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.