பெண்களின் அரசியல் பங்களிப்புக்கு மக்கள் எந்த அளவுக்கு வரவேற்பு கொடுப்பார்கள் என்பதற்கு கேரளத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலே சான்று. குறிப்பாக, இளம் பெண்கள் பலர் வாகை சூடியிருக்கிறார்கள். தான் தூய்மைப்பணி செய்த அலுவலகத்திலேயே சேர்மனாக உயர்ந்திருக்கும் ஆனந்தவள்ளியின் வெற்றி, அரசியல் களத்தில் பெண்களின் இடம் குறித்த நம்பிக்கையை அதிகரித்துள்ளது.

21 வயதில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் ஆர்யா ராஜேந்திரனைப் போலவே கேரளம் கொண்டாடும் மகளாகியிருக்கிறார் ஆனந்தவள்ளி. தேர்தலில் நியாயமாகப் போட்டியிட்டு வெற்றிபெறுவதற்கும் வர்க்க, பொருளாதாரப் பின்புலத்துக்கும் தொடர்பிருக்க வேண்டிய அவசிய மில்லை என்பதை நிரூபித்திருக்கிறார். ஆனந்தவள்ளியின் வெற்றி, அரசியல் என்பது எளிய மக்களுக்கானதாக இன்னும் இருக்கவே செய்கிறது என்பதையும் உணர்த்தியிருக்கிறது. பத்தனாபுரம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் நாற்காலியில் எவ்விதப் பெருமிதமும் பதற்றமும் இல்லாமல் அமர்ந்திருக்கிறார் ஆனந்தவள்ளி.

தூய்மைப் பணியாளராக இருந்து சேர்மனாக பதவியேற்றிருக்கிறீர்கள். எப்படிச் செயல்படப்போகிறீர்கள்?

நான் ஏற்கெனவே தலவூர் கிராமப் பஞ்சாயத்தில் மூணு வருசம் துப்புரவுப் பணி செஞ்சிருக்கேன். அதுக்கு அப்புறம்தான் பத்தனாபுரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்துக்கு வேலைக்கு வந்தேன். இங்கே பத்து வருசமா தூய்மைப் பணியாளரா இருக்கேன். பஞ்சாயத்திலேயே பணிசெய்ததால் மக்களுக்கு என்ன தேவை, என்ன மாதிரியான கோரிக்கைகளோடு வருவார்கள், அதையெல்லாம் எப்படி நிதி ஒதுக்கிச் செயல்படுத்துவதுன்னு எல்லாம் தெரியும். இது எல்லா வற்றையும்விட மார்க்சிஸ்ட் கட்சியில் நீண்ட காலமாக உறுப்பினராக இருக்கிறேன். அந்த இயக்கம் எனக்கு நிறையவே கற்றுக்கொடுத்திருக்கிறது. இதெல்லாம்தான் மக்களின் தேவைக் கேற்ப என்னால் செயல்பட முடியும் என்னும் நம்பிக்கையைத் தந்துள்ளது.

தூய்மைப் பணிக்கு வருவதற்கு முன்பு தொடக்கப்பள்ளி ஒன்றில் ஆயா வேலை செய்தேன். அது, பள்ளிக்கூடப் பேருந்தில் குழந்தைகளை ஏற்றி, பத்திரமாக இறக்கிவிடும் வேலை. நான் பார்த்தது அத்தனையும் விளிம்புநிலை வேலைகள்தாம். ஆனால், மக்களோடு மிக நெருக்கமானவை. அவர்களோடு அதிக உரையாடல் நடத்த வாய்ப்பை உருவாக்கியவை. அந்த அனுபவமும் கைகொடுக்கும் என நம்புகிறேன்.

உங்கள் குடும்பப் பின்னணி பற்றிச் சொல்லுங்கள்…

நான் மூன்றாம் தலைமுறை தூய்மைப் பணியாளர். இதைச் சொல்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. சிறு வயதில் நான் பட்ட துயரங்கள் இப்போதும் நினைவில் இருக்கின்றன. சிறுவயதில் அப்பா குடும்பத்தைக் கைவிட்டுவிட்டார். அவரது பெரும்போக்கான வாழ்வால் குடும்பம் நிர்க்கதியானது. தலவூரில் பிரசித்திபெற்ற தேவி கோவில் ஒன்று உள்ளது. அங்கே என்னுடைய பாட்டியும் அம்மாவும் தூய்மைப் பணியாளர்க ளாக இருந்தார்கள். அதில் கிடைத்த வருமானத்தில்தான் என் குழந்தைப் பருவம் ஓடியது.

பாட்டி, அம்மா வரிசையில் பார்த்தால் தூய்மைப் பணியில் நான் மூன்றாம் தலைமுறை தானே? என் கணவர் மோகனனுக்கு பெயின்டிங் வேலை. இரண்டு பசங்க. மூத்தவன் மிதுன் மோகன் கல்லூரியிலும் இளையவன் கார்த்திக் பன்னிரண்டாம் வகுப்பும் படிக்கிறாங்க. ஏழை, பணக்காரன்னு பார்த்து திறமை வர்றதில்லைல்ல. என்னோட ரெண்டு பசங்களும் ரொம்ப நல்லா பேட்மிண்டன் விளையாடுவாங்க.

அரசியல் ஆர்வம் எப்படி வந்தது?

ஒவ்வொரு மனுஷனுக்குள்ளுமே அரசியல் ஈடுபாடு இருக்கிறது. அப்படித்தான் எனக்குள்ளும் இருந்தது. என்னோட வீட்டுக்காரர் சி.பி.எம். கட்சியில் உள்ளூர் கமிட்டி உறுப்பினர். இடதுசாரிகள் கை கொள்ளும் விளிம்புநிலை மக்களுக்கான அரசியல் எனக்கும் பிடிக்கும். பத்து வருசத்துக்கு முன்னாடியே நானும் மார்க்சிஸ்ட் கட்சியில் சேர்ந்துட்டேன். கட்சி நடத்துற கூட்டம், பேரணின்னு எல்லாவற்றிலும் கலந்துக்குவேன். கூட்டிப் பெருக்குறவதானேன்னு யாரும் என்னை எங்கேயும் நிராகரிச்சதில்லை. அதுதான் இன்னும் வேகமாக இயங்கணுங்கற உத்வேகத்தை எனக்குத் தந்தது. இந்தத் தேர்தலில் நிற்கிறீர்களான்னு கட்சியில இருந்து கேட்டாங்க. சகாவுகள் எனக்காக வேலை செய்தார்கள். 654 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மகிழ்ச்சி அடங்குவதற்குள், என்னை சேர்மனாக்கி இன்னும் சந்தோசத்தைக் கொடுத்திருக்கிறது எங்க கட்சி.

பெரும் பணமுதலைகளுக்கானது தான் அரசியல்; ஆள், படை, அம்பாரி எனத் திரட்ட வேண்டும், ஃபிளெக்ஸ் பேனர் வைக்க வேண்டும், தலை வர்களை வாழ்த்தி போஸ்டர் ஒட்டவும் விளம்பரப்படுத்தவும் வேண்டும்.

இப்படியெல்லாம் செய்தால்தான் பதவி கிடைக்கும் என்கிற மற்ற கட்சிகளோட பண அரசியலுக்கும் குட்டு வைத்திருக்கிறது எங்களைப் போன்ற எளியவர்களோட வெற்றி. எளிய மக்களின் கையில் அதிகாரத்தைக் கொடுப்பதைத்தான் மக்களும் விரும்பு கிறார்கள் என்பதையும் எங்களோட வெற்றியே உணர்த்தியிருக்கு.

சேர்மனாக உங்கள் பெயர் அறிவிக்கப் பட்ட தருணம் எப்படி இருந்தது?

இப்படியொரு நிலையை கனவில்கூட நினைத்துப் பார்க்கவில்லை. என்னை சேர்மனாக்கியது என்னைவிட என் கிராம மக்களுக்கு அதிக மகிழ்ச்சியைக் கொடுத்திருக்கிறது. போனவாரம்வரை நான் டீ வாங்கிக் கொடுத்த அதிகாரிகள் என்னை மேடம் எனச் சொல்லி வாழ்த்தியபோதுதான், ஜனநாயகத்தின் வலிமை தெரிந்தது. என்னை நம்பி வாக்களித்த மக்களுக்கும் எனக்கு இவ்வளவு பெரிய பொறுப்பை வழங்கிய மார்க்சிஸ்ட் கட்சிக்கும் இந்த நொடியிலும்கூட மனதுக்குள் நன்றி சொல்லிக்கொண்டேதான் இருக்கிறேன்.

சுழற்சி அடிப்படையில் பட்டியல் இனப் பெண்ணுக்கு சேர்மன் பதவி ஒதுக்கப்பட்டதால்தான் வாய்ப்புக் கிடைத்தது என்று கூறப்படுகிறதே?

நான் பஞ்சாயத்தில் தினக்கூலி அடிப்படையில்தான் தூய்மைப் பணி செய்தேன். மாதத்துக்கு 2,000 ரூபாய் சம்பளம் வாங்கினேன். மதியத்தோடு வேலை முடிந்துவிடும். மதியத்துக்கு மேல் ‘குடும்ப மகளிர் குழுவில் வேலைசெய்வேன். இவ்வளவுதான் என் பொருளாதார பலம். சுழற்சி அடிப்படையில் பதவியை ஒதுக்குவது தேர்தல் முடிவுக்குப் பின் திடீரென நடந்தது அல்ல. பட்டியல் இனத்திலேயே வலுவான பொருளாதாரப் பின்னணி கொண்டவர்களைக் களம் இறக்கும் அளவுக்கு நேரம் இருந்தது. ஆனால், எங்கள் கட்சி அதைச் செய்யவில்லை.

பத்தனாபுரத்தில் மொத்தம் 13 கவுன்சிலர் இடங்கள் உண்டு. இதில் ஏழு இடத்தை இடது முன்னணிக் கூட்டணி கைப்பற்றியது. அதில், பட்டியல் இனப் பெண்ணான நான் ஜெயித்ததால் சேர்மன் வாய்ப்புக் கிடைத்தது. இதை அதிர்ஷ்டம் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், இந்த வெற்றியை அதிர்ஷ்டம் என்று சொல்வது அபத்தம். எனக்குக் கிடைத்திருக்கும் இந்தப் பதவிக்குரிய பொறுப்பைச் சிறப்புற ஏற்று நடத்துவேன். பள்ளிப் படிப்பைத் தாண்டாவிட்டாலும் வாழ்க்கை எனக்கு நிறைய கற்றுக்கொடுத்திருக்கிறது. அந்த அனுபவத்தைக் கொண்டே மக்களுக்குப் பயனுள்ள வகையில் செயல்பட முடியும். நிறைய கற்றுக்கொள்ளவும் ஆர்வமாக இருக்கிறேன்.