தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் பிப்ரவரி 2 – 2021 முதல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.

ஆயிரக் கணக்கான அரசு ஊழியர்கள் தமிழகத்தின் பல ஊர்களில் 4 நாட்களாக இரவு பகல் பாராது 24 × 7 வீதிகளில் அமர்ந்திருக்கிறார்கள். கொளுத்தும் வெயில், கொட்டும் பணி அவர்களின் மன உறுதியைச் சற்றும் குலைக்கவில்லை. மத்திய தர ஊழியர்களின் தீரம் மிக்க போராட்டம் தொழிற்சங்க இயக்கத்தின் வரலாற்றில் நம்பிக்கை அளிக்கும் புதிய பதிவாகும். சில மையங்களில் காவல் துறையின் அடக்குமுறையை எதிர் கொண்டுள்ளார்கள். பெண் ஊழியர்கள் பலர் களத்தில் நிற்கின்றனர்.

நான்கு நாட்களாக போராடும் அரசு ஊழியர்களை சந்திக்கக் கூட முதல்வர் இது வரை முன் வரவில்லை. கோவிட்டை எதிர் கொள்வதில் சிறப்பான மக்கள் சேவை ஆற்றிய அரசு ஊழியர்களுக்கு அரசு தருகிற பரிசு இதுதானா என்ற கேள்வி எழுகிறது.

முடக்கப்பட்ட பஞ்சப்படி, பறிக்கப்பட்ட சரண்டர் தொகை, நிரப்பப்படாத காலியிடங்கள், தொகுப்பூதியம்- மதிப்பூதியம் பெறும் மூன்றரை லட்சம் ஊழியர்க்கு காலமுறை ஊதியம் உள்ளிட்ட பிரச்சினைகளை முன்னிறுத்தி இப்போராட்டம் நடைபெறுகிறது. இன்னொரு கோரிக்கையும் உள்ளது.

அவர்களின் முக்கியக் கோரிக்கைகளில் ஒன்று புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய் என்பதாகும். இக் கோரிக்கை தமிழக அரசு ஊழியர் நலனுக்கானது மட்டுமல்ல. சமூகப் பாதுகாப்பையே கேள்விக்கு ஆளாக்கும் புதிய பென்சன் திட்டம் உலக மயப் பாதையின் தாக்குதல் ஆகும். பயன் வரையறுக்கப்பட்ட பென்சன் திட்டம் (Defined Benefit) மறுக்கப்பட்டு, பங்களிப்பு மட்டுமே வரையறுக்கப்பட்ட பென்சன் திட்டம் (Defined Contribution) அனைத்து துறை ஊழியர்கள் மீதும் திணிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு அரங்கிலும் இதற்கு எதிராகப் போராடி வருகிறோம். பன் முனைகளில் இருந்து போராடித் தகர்க்கப்பட வேண்டிய அபாயத்திற்கு எதிராகப் பெரும் எண்ணிக்கையிலான ஒரு பகுதி போராடிக் கொண்டிருக்கிறது. அப் போராட்டத்தின் வெற்றி எல்லோருக்கும் முக்கியமானது. பிப்ரவரி 8 முதல் இப் போராட்டம் ஜாக்டோ ஜியோ அமைப்பின் கூட்டுப் போராட்டமாகவும் மலரவிருக்கிறது.

இப் பின்புலத்தில் இப் போராட்டத்தின் வெற்றி ஒட்டு மொத்த உழைப்பாளி மக்களின் போராட்டங்களை முன்னெடுக்கவும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்கிற கோரிக்கைக்கு பெரும்பலத்தைத் தரும்.

ஆகவே அரசு ஊழியர்க்கு ஆதரவாக தமிழகம் முழுமையும் ஆர்ப்பாட்டங்களை நடத்துமாறும், ஆதரவு போஸ்டர்களை வெளியிடுமாறும், கைதாகி மண்டபங்களில் வைக்கப்படும் அரசு ஊழியர்களை நேரில் சென்று வாழ்த்துமாறும், உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தி நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிட முதல்வரை வலியுறுத்துமாறும் அனைத்து மத்திய தர ஊழியர் அமைப்புகளையும் கேட்டுக் கொள்கிறோம்.

தோழமையுடன்,

தென்மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பு (AIIEA)

தென்மண்டல பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம்(AIIEA)

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம். (BEFI)

மத்திய அரசு ஊழியர் மகா சம்மேளனம்

பி.எஸ். என். எல் ஊழியர் சங்கம்-தமிழ்நாடு

பி.எஸ். என். எல் ஊழியர் சங்கம்-சென்னை தொலைபேசி