நாட்டில் பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து 4ம் நாளாக உயர்ந்து, வரலாறு காணாத புதிய உச்சத்தை எட்டியுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையை பொருத்து,  பெட்ரோல், டீசல் விலையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் தினமும் மாற்றி அமைத்து நிர்ணயித்து வருகின்றன. இம்மாத தொடக்கத்தில் இருந்து பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த 4 நாட்களாக தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், நேற்று பெட்ரோல் விலை 0.31 காசுகளும், டீசல் 0.35 காசுகளும் உயர்த்தப்பட்டன இதனால், டெல்லி, மும்பையில் முன்பு எப்போதும் இல்லாத வகையில் லிட்டர் பெட்ரோல் விலை முறையே ரூ.88.14, ரூ. 94.64 ஆக இருந்தது.
இதேபோல், டெல்லியில் ஒரு லிட்டர் டீசல் ரூ. 78.38க்கும் மும்பையில் ரூ. 85.23க்கும் விற்பனையானது.கடந்த 4 நாட்களில் மட்டும் பெட்ரோல் விலையில் லிட்டர் ஒன்றுக்கு ரூ.1.21ம், டீசல் விலையில் ஒரு லிட்டருக்கு ரூ. 1.25ம் உயர்ந்துள்ளது. இது, மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாமில் ரூ.5 குறைப்பு
அசாமில் முதல்வர் சர்பானந்த சோனோவால் தலைமையிலான பாஜ ஆட்சி நடக்கிறது. இங்கும் ஏப்ரலில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், அங்கு பெட்ரோல், டீசல் மீது விதிக்கப்பட்ட கூடுதல் செஸ் வரியை திரும்ப பெற மாநில அரசு முடிவு எடுத்துள்ளது. இதற்காக, ரூ.60,784.03 கோடிக்கான துணை மானிய கோரிக்கை, சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதனால், அசாமில் பெட்ரோல், டீசல் விலையில் ரூ.5 குறைக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்காக பாஜ அரசு இதை செய்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து்ள்ளன.