பெட்ரோல் – டீசல் விலை நாடு முழுவதும் வரலாறு காணாத வகையில் அதிகரித்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில் பர்பானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 100 ரூபாயைக் கடந்துள்ளது.

சர்வதேச சந்தையில் விலைக் குறைந்தாலும் இந்தியாவில் பெட்ரோலியப் பொருட்கள் மீதான வரிகள் குறைக்கப்படுவதில்லை என்பதால், பெட்ரோல் – டீசல் விலைகள் குறைவதே இல்லை.இந்தியாவில் சில்லரை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு மத்திய அரசு 61 சதவிகிதமும் மற்றும் மாநில அரசு 56 சதவிகிதமும் வரி விதித்து வருவதால், நாடு முழுவதும் எரிபொருள் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருந்து வருகிறது. மத்திய அரசு தற்போது பெட்ரோலுக்கு லிட்டருக்கு 19 ரூபாய் 16 காசுகளும், டீசலுக்கு 16 ரூபாய் 77 காசுகளும் வரியாக வசூலித்து வருகிறது.

இதனால் நாட்டின் பல பகுதிகளில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 100 ரூபாயை நெருங்கி விட்டது. தலைநகர் தில்லியில் திங்களன்று ஒரு லிட்டர் பெட்ரோல் 88 ரூபாய் 99 காசுகளுக்கும், டீசல் 79 ரூபாய் 35 காசுகளுக்கும் விற்பனையானது.ஆனால் முதன்முறையாக, மகாராஷ்டிராவின் பர்பானி மாவட்டத்தில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ. 100-ஐ கடந்து விட்டது. துணை பொருட்களுடன் ஒரு லிட்டர் பெட்ரோல் ஞாயிறன்று 100 ரூபாய் 16 காசுகளுக்கு விற்கப்பட்டது. டீசல் விலை 97 ரூபாய் 38
காசுகளாக அதிகரித்துள்ளது.

நாட்டிலேயே பெட்ரோல் – டீசலுக்கு அதிக வரி விதிக்கும் ராஜஸ்தானிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது. அங்குள்ள ஸ்ரீகங்காநகர் டவுனில் ஞாயிறன்று 99 ரூபாய் 29 காசுகளுக்கும், டீசல் 91 ரூபாய் 17 காசுகளுக்கும் விற்கப்பட்டுஉள்ளது. ராஜஸ்தான் அரசு கடந்த மாதம் வாட் வரியில் 2 சதவிகிதத்தைக் குறைத்ததும்கூட பெட்ரோல், டீசல் விலை குறையவில்லை.மும்பையில் திங்களன்று பெட்ரோல் ரூ. 95 ரூபாய் 46 காசுகளுக்கும், டீசல் ரூ. 86 ரூபாய் 34 காசுகளுக்கும், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 91 ரூபாய் 19 காசுகளுக்கும், டீசல் விலை ரூ. 84 ரூபாய் 44 காசுகளுக்கும் விற்பனையானது.