மத்திய அரசாங்கம் பெட்ரோல் – டீசல் விலைகளைத் தொடர்ந்து உயர்த்திக் கொண்டே இருப்பது, ஏற்கனவே கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலைத் தொடர்ந்து வேலையிழப்பையும், வருமான இழப்பையும் எதிர்கொண்ட மக்களின் பிரச்சனைகளுக்கு மேலும் சுமைகளைக் கொண்டு வந்திருக்கிறது.நாள்தோறும் பெட்ரோலின் சில்லரை விலைகளை உயர்த்தி வருவதன் மூலம் அதன் விலை பல மாநக
ரங்களில் லிட்டருக்கு 90 ரூபாய்க்கும் மேல் சென்றுவிட்டது. விரைவில் அது 100 ரூபாயை எட்டிப் பிடித்திடும்.

அதீத வரிகளே காரணம்
உலக அளவில் கச்சா எண்ணெய்யின் விலைகள் உயர்ந்திருப்பதை மேற்கோள்காட்டி இந்த உயர்வை அரசாங்கமும், எண்ணெய் நிறுவனங்களும் நியாயப்படுத்துகின்றன. எனினும் இது ஒரு சந்தேகத்திற்குரிய கூற்றா
கும். மக்கள் மீது தாங்க முடியாத அளவிற்கு சுமைகள் ஏற்றப்பட்ருப்பதற்கு மிக முக்கிய காரணம், பெட்ரோலியப் பொருட்களின் மீது மத்திய அரசால் விதிக்கப்பட்டுள்ள அதீத வரிகளேயாகும். 2014-15-க்கும், 2020-21-க்கும் இடையே இந்தியாவில் கச்சா எண்ணெயின் (கச்சா எண்ணெய்கள் கலக்கப்பட்டவற்றையே இந்தியா வாங்குகிறது) விலைகள் 17.6 சதவீதம் அளவிற்கு உயர்ந்தன. அதே காலகட்டத்தில், இந்தியாவில் சராசரி சில்லரை விலை பெட்ரோலுக்கு 55.3 சதவீத அளவிற்கும், டீசலுக்கு 72.5 சதவீத அளவிற்கும் உயர்ந்தன. இதிலிருந்து உலக விலை அளவுகளைவிட இந்தியாவில் அதன் சில்லரை விலைகள் அதீதமான முறையில் அதிகரிக்கப்பட்டன என்பது தெளிவாகத் தெரிகிறது.

காட்டுமிராண்டித்தனமான உயர்வு
மத்திய அரசாங்கத்தால் கலால் வரிகளும் செஸ் வரிகளும் தொடர்ந்து உயர்த்தப்பட்டு வருவதே முதுகை உடைக்கும் அளவுக்கு விலைகள் உயர்ந்திருப்பதற்குக் காரணமாகும். கொரோனா வைரஸ் தொற்றுப் பரவல் ஏற்பட்ட 2020ஆம் ஆண்டில்கூட, மோடி அரசாங்கம் மார்ச் 14 அன்று பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரிகளை தலா லிட்டருக்கு 3 ரூபாய் அளவிற்கு உயர்த்தியது. இதனைத் தொடர்ந்து மே 6 அன்று பெட்ரோலுக்கு லிட்டருக்கு 10 ரூபாய் என்ற அளவிலும், டீசலுக்கு லிட்டருக்கு 13 ரூபாய் என்ற அளவிலும் மிகவும் காட்டுமிராண்டித்தனமான உயர்வை கலால் வரிகளில் ஏற்படுத்தியது.     2014-15க்கும் 2019-20க்கும் இடையே மத்திய அரசாங்கத்தின் கலால் வரி வசூல் 125 சதவீத அளவிற்கு அதிகரித்தது. பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் சில்லரை விலைகளின் உயர்விற்கு பிரதான காரணம் மத்திய அரசாங்கமே என்பதும், மாநில அரசாங்கங்களால் உயர்த்தப்படும் மதிப்புக் கூட்டு வரி (VAT-Value Added Tax)மூலம் அல்ல என்பதும், இதே காலகட்டத்தில் மாநில அரசாங்கங்கள் பெட்ரோலியப் பொருட்களின் மீதான மாநில வரி வருவாயை 37.5 சதவீத அளவிற்கே உயர்த்தியிருக்கிறது என்கிற உண்மையிலிருந்து தெளிவாக நிரூபணமாகிறது.

புதிய வரிகள்
தற்சமயம், தில்லியில், பெட்ரோலின் சில்லரை விலையில் 63 சதவீத வரிகள் இருக்கின்றன. இதில் மத்திய அரசின் பங்கு, 40 சதவீதமாகும், மாநில அரசின் மதிப்புக் கூட்டு வரியின் பங்கு 23 சதவீதமாகும். மத்திய அரசாங்கம் மத்திய கலால் வரிகளையும் செஸ் வரிகளையும் குறைக்க மறுத்துக்கொண்டிருக்கிறது.இதற்குப் பதிலாக, சமீபத்திய பட்ஜெட்டில் புதிதாக விவசாயம் மற்றும் உள்கட்டமைப்பு வளர்ச்சி செஸ் வரி என்ற பெயரில் பெட்ரோலில் லிட்டருக்கு 2.5 ரூபாயும், டீசலில் லிட்டருக்கு 4 ரூபாயும் விதித்திட மத்திய அரசு முன்மொழிவுகளைச் செய்திருக்கிறது. நிதியமைச்சர், அடிப்படைக் கலால் வரியில் விகிதாசாரக் குறைவு, சிறப்புக் கூடுதல் கலால் வரி மேற்கொள்ளப்படும் என்று அறிவித்தார். இதனால் நுகர்வோர் பாதிக்கப்பட மாட்டார்கள் என்று கூறினார்.

இதன் பொருள் என்னவென்றால், மத்திய கலால் வரிகளில் குறைப்பு எதுவும் இருக்காது என்பதும், அதில் ஒரு குறிப்பிட்ட அளவு விகிதாசாரம் செஸ் வரியாக மாற்றப்படும் என்பதுமேயாகும். இந்த சூழ்ச்சி மூலமாக, மாநிலங்களுக்கு செஸ் வரி என்ற பெயரில் கிடைத்து வந்த பங்கு பறிக்கப்படுகிறது. ஏனெனில் செஸ் வரி என்பது மத்திய மாநில அரசுகளுக்கிடையே பிரிக்கக்கூடிய வரையறைக்குள் வராது. (Cess does not come under the divisiblepool)

65:35 விகிதம்
மத்திய கலால் வரிகளிலிருந்து மாநிலங்களுக்கு அளிக்கவேண்டிய விகிதாச்சாரம் வீழ்ச்சியடையும் போக்கிலிருந்து இது ஏற்பட்டிருக்கிறது. இதன்மூலம் இதற்கு முன் மத்திய அரசுக்கும் மாநில அரசுக்கும் இடையே 60:40 என்ற விகிதாச்சாரத்தில் இருந்து வந்த பங்கு பிரிப்பு இப்போது இந்த ஆண்டின் 2021 ஜனவரி-மார்ச் காலாண்டிற்கு 65:35 என்று மாறியிருக்கிறது.அரசாங்கத்தின் ஒட்டுமொத்த வரி வருவாய்கள் வீழ்ச்சியடைந்திருக்கக்கூடிய நிலையில், பெட்ரோலியப் பொருட்களின் மீதான இந்த அக்கிரம வரி கட்டமைப்பு அரசாங்கத்திற்கு பெரிய அளவிலான வருவாயாக மாறியிருக்கிறது.  சமீபத்திய மத்திய பட்ஜெட்டில் தாக்கல் செய்யப்பட்டுள்ள 2020-21க்கான வரி வசூல் தரவின்படி, வரி வருவாய் அதன் இலக்கைவிட வீழ்ச்சியடைந்திருக்கிறது. ஆனால் இதற்கு கலால் வரிகள் மட்டும் விதிவிலக்கு. இலக்கை விட வரி வரு
வாய் 17.8 சதவீதம் வீழ்ச்சியடைந்திருக்கக்கூடிய அதே சமயத்தில், கலால் வரிகள் அதன் இலக்கைக் காட்டிலும் 35 சதவீதம் அதிகமாக வசூலாகியிருக்கிறது.

மக்கள் தலையில் ஏற்றப்பட்ட நெருக்கடி
மொத்தத்தில், அரசாங்கம் சமூக முடக்கத்தாலும், பொருளாதாரம் மூழ்கிக் கொண்டிருப்பதாலும் ஏற்பட்ட சுமைகளை பெட்ரோலியப் பொருட்களின் விலைகளைக் கலால் வரிகள் மூலமாகக் கடுமையாக உயர்த்தியிருப்பதன் மூலம் மக்கள்மீது மடை மாற்றியிருக்கிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலையில் வீழ்ச்சியோ அல்லது மந்தகதியில் உயர்வோ ஏற்பட்டிருப்பதைப் பற்றியெல்லாம் அது கவலைப்படவில்லை.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலைகளை உயர்த்திக்கொண்டே செல்வது அனைத்துத் தரப்பு மக்களையும் பாதித்துக் கொண்டிருக்கின்றன. இதில் மிகவும் மோசமாகப் பாதிப்புக்கு ஆளாகியிருப்பவர்கள், சமீபகாலத்தில் வேலைகளையும் வாழ்வாதாரங்களையும் இழந்தவர்களாவார்கள்.

மேலும் பொருள்கள் போக்குவரத்தைச் சார்ந்தே வாழ்ந்துவரும் சிறு வணிகர்கள், கடைக்காரர்கள் மற்றும் விற்பனையாளர்கள் தாங்கள் பெற்றிடும் பொருள்களின் விலைகள் இதனால் உயர்ந்துகொண்டிருப்பதையும் பார்க்கிறார்கள். விவசாயிகள் தாங்கள் பயன்படுத்தும் டிராக்டர்களுக்கும், பம்ப் செட்டுகளுக்கும் பயன்படுத்தும் டீசலுக்கு அதிக அளவில் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கிறது. முறைசாராத் தொழில்களில் ஈடுபட்டிருக்கும் நாட்கூலித் தொழிலாளர்களும் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர்வால் கடுமையாகப் பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். பொருளாதார மந்தத்திலிருந்து விடுபடுவதற்காகக் கடுமையான முயற்சிகளில் ஈடுபட்டுவந்த நுண்ணிய மற்றும் சிறிய தொழில் பிரிவைச் சேர்ந்தவர்களும் இதனால் கடும் பாதிப்புக்கு ஆளாகியிருக்கிறார்கள். மத்தியதர வகுப்பினரின் பட்ஜெட்டும் அவர்கள் தனியார் மற்றும் பொதுப் போக்குவரத்துக்கான கட்டணங்கள் அதிகரித்திருப்பதாலும், சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை உயர்ந்திருப்பதாலும் கடும் சிரமத்தினை உணரத்தொடங்கி இருக்கிறார்கள்.

அரசு என்ன செய்ய வேண்டும்?
பெட்ரோலியப் பொருட்களின் மீதான வரிக் கொள்கை, மோடி அரசாங்கத்தின் முரட்டுத்தனமான மக்கள் விரோதக் கொள்கையின் ஒரு பகுதியேயாகும். சமூக முடக்கமும், கொரோனா வைரஸ் தொற்றும் நம் சமூகத்தில் வருவாய் மற்றும் செல்வம் ஆகியவற்றுக்கிடையேயான சமத்துவமின்மையையும் அதிகரித்தும், ஆழப்படுத்தியுமிருக்கிறது. இத்தகைய சூழ்நிலையில், அரசாங்கமானது பெரும் பணக்காரர்கள் மீது வரிகளை உயர்த்திட வேண்டும், செல்வ வரி விதித்திட வேண்டும், இந்தக் காலத்தில் கொள்ளை லாபம் ஈட்டிய கார்ப்பரேட்டுகளிடம் அரசாங்கம் அதிகமான தொகையைக் கறந்திட வேண்டும். இதையெல்லாம் செய்வதற்குப்பதிலாக இந்த அரசாங்கம் அக்கிரமமான முறையில் பெட்ரோல் மற்றும் டீசலின் மீது வரிகளை உயர்த்திக்கொண்டே இருக்கிறது. இதன்மூலம் மத்திய அரசு மக்களின் அற்ப அளவிலான வருவாய்களையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது.

மத்திய அரசாங்கம் பெட்ரோலியப் பொருள்கள் மீது அதீதமான முறையில் விதித்துவரும் கலால் வரிகளையும், செஸ் வரிகளையும் கணிசமான அளவிற்குத் திரும்பப் பெறக் கட்டாயப்படுத்தப்பட வேண்டும். இதற்கான போராட்டங்கள் தீவிரமாக்கப்பட வேண்டும். மக்களின் வாழ்வாதாரங்கள் மற்றும் அவர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தின் ஒரு பகுதியாக இதுவும் மாற வேண்டும்