கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக- மத்திய பாஜக அரசு 3 புதிய வேளாண் சட்டங்களைக் கொண்டு வந்திருக்கும் நிலையில், அதற்கு எதிராக இந்திய விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

தலைநகர் தில்லியின் மூன்று முக் கிய எல்லைகளை முற்றுகையிட்டு 125 நாட்களாக விவசாயிகள் நடத்தும்போராட்டம் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டிருக்கிறது. போராட்டக்களத் தில் இதுவரை 250-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். ஆனாலும் மன உறுதி குலையாமல் விவசாயிகள் போராடி வருகின்றனர்.இதுஒருபுறமிருக்க, இந்தப் போராட்டக் காலத்திற்கு இடையே ஏதாவது முக்கிய மதப் பண்டிகைகள் வந்தால், அந்த பண்டிகைகளையும் தங்களின் போராட்டத்திற்கான கருவியாக விவசாயிகள் மாற்றி வருகின்றனர்.

கடந்த 2020 அக்டோபரில், நாடுமுழுவதும் தசரா விழா கொண்டாடப் பட்டது. பொதுவாக தசரா விழாவின் நிறைவில் ராவணன் என்பவனை தீமையின் அம்சமாக கருதி, பல அடி உயரத்திற்கு அந்த ராவணன் உருவ பொம்மையை நிறுவி, அதனை நன்மையின்அம்சமான ஸ்ரீராமன் அம்பு ஏவி எரிக் கும் நிகழ்ச்சியை நடத்துவார்கள்.இந்த தசரா விழாவை, தங்களுக்கான போராட்ட ஆயுதமாக எடுத்துக்கொண்ட விவசாயிகள், வேளாண் சட்டங்கள் மூலம் தங்களின் வாழ்க்கையையும், வாழ்வாதாரத்தையும் அழிக்க வந்த பிரதமர் நரேந்திர மோடி, அவரின் நண்பர்கள் அம்பானி, அதானிஆகியோர்தான் தீமையின் அச்சு என்றுகூறி, அவர்களின் உருவபொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர். இது அப்போது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில், ஹோலி பண்டிகையையும் அவர்கள் கையில் எடுத்துள்ளனர். ஞாயிறன்று வட இந்திய மாநிலங்களில் ஹோலி பண்டிகை விமரிசையாககொண்டாடப்பட்ட நிலையில், தில்லி எல்லையில் போராட்டம் நடத்தி வரும்விவசாயிகள், வேளாண் சட்டங்களின் நகலை எரித்து, ஹோலி பண்டிகை கொண்டாடியுள்ளனர்.வழக்கமாக ஹோலி பண்டிகையின் போது, தீமூட்டி அதில் தேவையில்லாதவற்றை போட்டு எரிப்பதும் ஒரு சடங்காகும். அதாவது, ஹோலிகா என்ற அரக்கியை தகனம்(ஹோலிகா தஹன்) செய்வதாக ஐதீகம். அந்த வகையில் மோடி அரசுகொண்டுவந்துள்ள வேளாண் சட்டமும் நாட்டுக்குத் தேவையில்லாததுதான் என்று, 3 வேளாண் சட்டங்களின் நகல்களையும் விவசாயிகள் எரித்துள்ளனர்.

இந்திய உணவுக் கழகத்தின் பட்ஜெட் கடந்த சில ஆண்டுகளில் குறைக்கப்பட்டுள்ளது. பயிர் கொள் முதலுக்கான விதிமுறைகளை இந்தியஉணவுக் கழகம் மாற்றியுள்ளது. புதியவேளாண் சட்டங்கள் மூலம் வேளாண்விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் பொது விநியோக அமைப்பும் தற்போது சீர் குலைக்கப்படுகிறது. இவ்வாறு இந்தநாட்டுக்கே எதிரான வேளாண் சட் டங்களை ஒழித்துக் கட்டுவதுதான் உண்மையான ஹோலி கொண்டாட்டமாக இருக்க முடியும் என்றும் விவசாயிகள் கூறியுள்ளனர்.வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டு, குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு (Minimum Support Price – MSP) தனிச் சட்டம் இயற்றப் படும் வரை, இதுபோன்ற தங்களின் போராட்டங்கள் தொடரும் என்றும் அறிவித்துள்ளனர்.