பொது வருங்கால வைப்பு நிதிஉள்ளிட்ட சிறு சேமிப்புத் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை, காலாண்டுஅடிப்படையில் மாற்றம் செய்ய முடிவெடுத்த மோடி அரசு, நடப்பு 2021-22நிதியாண்டின் முதல் காலாண்டிற் கான வட்டி விகிதத்தை மார்ச் 31 அன்று வெளியிட்டது.இதில், அனைத்து சிறுசேமிப்பு திட்டங்களுக்குமான வட்டி விகிதத்தை, ஒரேயடியாக 1.1 சதவிகிதம்அளவிற்கு குறைத்து, சிறுசேமிப்பாளர்களுக்கு கடும் அதிர்ச்சியை மோடிஅரசு ஏற்படுத்தியது. குறிப்பாக, பொது வருங்கால வைப்பு நிதிக்கான (PPF) வட்டி விகிதத்தை கடந்த 46 ஆண்டுகளில் இல்லாத வகையில், 7.1 சதவிகிதத்திலிருந்து 6.4 சதவிகிதமாக குறைத்தது. இதேபோல தேசிய சேமிப்புப் பத்திரங்களுக்கான (NSC) வட்டி விகிதம்6.8 சதவிகிதத்திலிருந்து 0.9 சதவிகிதம் குறைக்கப்பட்டு 5.9 சதவிகிதமாகநிர்ணயிக்கப்பட்டது. மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டு சேமிப்பு திட்ட வட்டி விகிதமும் 0.9 சதவிகிதம் குறைக்கப்பட்டு 6.5 சதவிகிதம் என் றாக்கப்பட்டது.

முதன்முறையாக சேமிப்பு வைப்புத் தொகைக்கான வட்டி விகிதமும் 4 சதவிகிதத்திலிருந்து 0.5 சதவிகிதம் குறைக்கப்பட்டு 3.5 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டது. இதுவே, ஒரு வருடத்திற்கான வைப்புத் தொகைக்கு 1.1 சதவிகிதம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. இந்த குறைப்பினால் 5.5 சதவிகிதமாக இருந்த வட்டி விகிதம் 4.4 சதவிகிதமானது.இரண்டு ஆண்டிற்கான வைப்பு தொகைக்கு 0.5 சதவிகிதமும், மூன்றுஆண்டு வைப்புத் தொகைக்கு 0.4 சதவிகிதமும், 5 ஆண்டிற்கான வட்டி விகிதத்தில் 0.9 சதவிகிதமும் வட்டி விகிதம் குறைக்கப்பட்டது. கிசான் விகாஸ் பத்திரம் மீதான வட்டி விகிதம் 6.9 சதவிகிதத்திலிருந்து 6.2 சதவிகிதமாக குறைக்கப்பட்டது.

பெண் குழந்தைகளுக்கான செல்வமகள் சேமிப்பு திட்டத்தைக்கூட மோடி அரசு விட்டுவைக்கவில்லை. இதற்கான வட்டி விகிதத்தை 7.6 சதவிகிதத்திலிருந்து 0.7 சதவிகிதம் குறைத்து 6.9 சதவிகிதமாக நிர்ணயித்தது. சுகன்ய சம்ரிதி யோஜனா (SSY) திட்டத்திற்கான வட்டி7.6 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இந்த வட்டிக்குறைப்பு ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வருவதாகவும் மோடி அரசு அறிவிப்பு வெளியிட்டிருந்தது. கடந்த 46 ஆண்டுகளில் இல்லாதஅளவிற்கான இந்த வட்டிக்குறைப்பு மக்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்தியர்களின் சேமிப்புப் பழக்கம்தான் நாட்டின்பொருளாதாரத்தை ஒரு நிலைத்தன் மையில் வைத்திருக்கிறது. அப்படியிருக்க, சிறுசேமிப்பு மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்கும் வகையிலும், மக்களை தனியார் நிதி நிறுவனங்களை நோக்கித் தள்ளிவிட்டு, அரசு சிறுசேமிப்புத் துறையையே ஒழித்துக்கட்டும் வகையிலும்மோடி அரசு வட்டிக் குறைப்பில் ஈடுபட்டிருப்பதாக பலரும் கண்டனங்களைத் தெரிவித்தனர்.

இதையடுத்து, சிறு சேமிப்புகளுக்கு வட்டி குறைப்பு செய்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்டிருந்த அறிக்கையை, ஒரே நாள் இரவுக்கு உள்ளேயே மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திரும்பப்பெறுவதாக அறிவித்துள்ளார். ஏற்கெனவே 2021 மார்ச் காலாண் டில் இருந்த வட்டி விகிதங்கள் அப்படியே தொடரும் என்றும்; வட்டி விகிதக் குறைப்பு கவனக் குறைவாக நடந்து விட்டது என்றும் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டு ஒரேயடியாக பல்டி அடித்துள்ளார்.

நடுத்தர மக்களின் வாழ்க்கையோடு விளையாடும் நிர்மலா சீதாராமனின் இந்த குளறுபடி, எதிர்க் கட்சித் தலைவர்கள் பலரையும் கொதிப்படைய வைத்துள்ளது. “நிதி அமைச்சர் மேடம், நீங்கள் அரசாங்கம் நடத்துகிறீர்களா அல்லது சர்க்கஸ் காட்சி நடத்துகிறீர் களா? கோடிக்கணக்கான மக்களைபாதிக்கும் இதுபோன்ற உத்தரவுகளையே கவனிக்காமல் வெளியிடுகிறீர்கள் என்றால், எவ்வாறு நாட்டின்பொருளாதாரத்தை நிர்வாகம் செய்வீர்கள், நடத்திக் கொண்டு செல்வீர்கள்… நீங்கள் நிதி அமைச்சராகத் தொடர உரிமை இல்லை” என காங்கிரஸ் கட்சியின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா சாடியுள்ளார்.

“பணவீக்கம் 6 சதவிகிதமாக இருக்கும் நிலையில் அது மேலும்அதிகரிக்கும். அப்படி இருக்கும் போது பாஜக அரசு, வட்டி விகிதத்தை6 சதவிகிதத்துக்கும் கீழ் குறைத்து, சேமிப்பை நம்பியிருக்கும் நடுத்தர வர்க்க மக்களின் வயிற்றில் அடிக்கப் பார்த்தது. ஆனால், இதில் சிக்கிக்கொண்டபோது, வழக்கமாகக் கூறுவதுபோல் ‘கவனிக்காமல் தவறுதலாக நடந்துவிட்டது’ என நிதியமைச்சர் சாக்குகளைக் கூறுகிறார். சேமிப்புத் திட்டங்களுக்கு அடுத்த காலாண்டுக்கான வட்டி விகிதத்தை அறிவிப்பது என்பது வழக்கமான செயல்முறை. இது மார்ச் 31-ம் தேதி வெளியானதில் என்ன கவனக்குறைவு இருக்க முடியும்?” என்று முன்னாள் நிதியமைச்சர்ப. சிதம்பரம் கேள்வி எழுப்பியுள் ளார்.